பட்டா மாறுதல்.. திண்டுக்கல் தாலுகா ஆபீசிலேயே அசிங்கமாக சிக்கிய பாக்யராஜ்.. சர்வேயர் மாட்டிக்கிட்டாரு
திண்டுக்கல்: இன்று ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் வட்டாட்சி அலுவலகத்திலும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
திருவண்ணாமலை அடுத்துள்ளது தேவனாம்பட்டு கிராமம். இங்குள்ள விஏஓ காந்தி என்பவரிடம், ஊதிரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் என்பவர், தன்னுடைய நிலத்துக்கான சிட்டா மற்றும் அடங்கல் கேட்டு மனு தந்துள்ளார்..

பட்டா நிலம்: ஆனால், விஏஓ லஞ்சம் கொடுத்தால்தான், பட்டா, சிட்டா தர முடியும் என்று கறாராக சொல்லி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி, விஏஓ ஆபீஸ் முன்னாடியே பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொண்டார். இப்போது அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்..
அதேபோல, பெரம்பலூர் அம்மாபாளையத்தை சேர்ந்த துரைராஜ் என்பவர், தடையின்மை சான்றிதழ் கேட்டு தாசில்தாரை அணுகியிருக்கிறார். துணை தாசில்தாரான பழனியப்பன் துரைராஜிடம் லஞ்சம் கேட்டு, வசமாக சிக்கிவிட்டார்.
நெஞ்சுவலி: இவரை கைது செய்ய போலீசார் சென்றபோது, நெஞ்சுவலி என்று சொல்லி உள்ளார். இதனால், உடனடியாக பழனியப்பனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால், இன்று விடிகாலை பழனியப்பன், தப்பிஓடிவிட்டாராம். அந்த துணை தாசில்தாரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரே நாளில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் பரபரப்பை தந்துள்ள நிலையில், திண்டுக்கல்லிலும் இதே விவகாரம் தலைதூக்கியிருக்கிறது.
திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நில பதிவுகள் துறையின் ஆவண காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள நில அளவை பிரிவில் சர்வேயர் பாக்யராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
சர்வேயர்: திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியை சேர்ந்த கணேஷ் குமார் என்பவர், தனிப்பட்டா வேண்டி விண்ணப்பித்ததுடன், இது தொடர்பாக சர்வேயர் பாக்யராஜையும் சந்தித்துள்ளார். ஆனால், தனிப்பட்டாவிற்காக பாக்யராஜ், அவரது உதவியாளர் சதீஷ் என்பவர் மூலமாக 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டாராம்.
இதில் படிப்படியாக பேரம்பேசி, கடைசியாக 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், தனிப்பட்டா வழங்குவதாக பாக்யராஜ் சொன்னாராம். இது தொடர்பாக கணேஷ்குமார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
கைது: ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை பாக்யராஜின் உதவியாளர் சதீஷிடம் வழங்குமாறு போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.. அதன்படியே இன்று பணத்தை சதீஷிடம் தரும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பிறகு பாக்யராஜையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இப்போது பாக்யராஜ், சதீஷ் 2 பேரையுமே போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications