கொலை, கார் திருட்டு.. கோர்ட் கேஸ் செலவுக்கு அரிசி கடத்தல்! திண்டுக்கல்லில் சிக்கிய கேங்! ஷாக் தகவல்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி கடத்தல் பின்னணியில் ரவுடி கும்பல் செயல்பட்டு வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தங்கள் குற்ற வழக்குகளில் சிக்கினால், நீதிமன்ற செலவுக்காக ரேசன் அரிசி கடத்தல், கார் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல், பேகம்பூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக தகவலின் பெயரில் துணைக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர் . அப்போது, இஸ்மாயில் மகன் முகமது சௌஹான் சேட் (23) கார் மூலம் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து முகமது சௌஹான் சேட்டை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி, 6 சிலிண்டர்கள், சிலிண்டர் ஏற்ற பயன்படுத்தும் பம்ப் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது இச்சம்பவத்தில் ரவுடி கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

ரேஷன் அரிசி கடத்தல்
திண்டுக்கல்லில் உள்ள அல்ஆஷிக் என்ற ரவுடி உள்ளான். இவன் இரு கும்பல் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் பல்வேறு கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் உள்ளான். ரவுடி அல்ஆஷிக் தலைமையில் குட்டி புலி போர்ஸ் அமைப்பை ஏற்படுத்தி தங்களது நீதிமன்ற செலவுக்காகவும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், ரேஷன் அரிசி கடத்தல் முதன்மையான தொழிலாக இருந்து வருகிறது. இந்த அரசி கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் கார்கள் இரு குற்றப் பின்னணிகளிலிருந்து எடுக்கப்படுகிறது.
ரவுடி கும்பல்
அதில், பிட்டிங் கார், Ones Car ஆகிய கார்கள் பயன்படுத்தப்படுகிறது. பிட்டிங் கார்கள் என்பது கார்களை தனி நபர்கள் அடமானம் பெற்று அதனை பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரவுடிகளுக்கு மறு அடமானம் வைப்பது. உண்மையான காரின் உரிமையாளர் மீண்டும் காரை கேட்க போவது அவர்களை மிரட்டி அதிகமாக பணம் பறித்து வருகின்றனர். அவ்வாறு பணம் தராத நபர்களின் கார்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற கார் உரிமையாளர்களை மிரட்டுவதற்காக இன்ஸ்டாகிராம் யூடியூப் மூலம் அல்ஆஷிக் தலைமையிலான குட்டி புலி குரூப் தாங்கள் மிகப்பெரிய ரவுடிகள் என விளம்பரப்படுத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கார் திருட்டு கும்பல்
இதே போல் Ones கார் என்பது பைனான்ஸ் மூலமாக கார்களை எடுத்துவிட்டு வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி விடுவது. மேலும் ஆவணங்கள் இல்லாமல் கார் வாங்குபவர்களிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்துவிட்டு பின் மீண்டும் அந்த காரை விற்பனை செய்த ரவுடி கும்பலே மீண்டும் திருடி விடுகின்றனர். இதனால் ஆவணங்கள் இல்லாமல் கார் வாங்குபவர் புகார் அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு திருடப்படும் வாகனங்களும் குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
திண்டுக்கல் போலீஸ்
இதன்மூலம் பணம் கிடைப்பது மட்டுமில்லாமல் அந்த காரும் குற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு பயன்படுத்துகின்றனர். இந்த வழக்கில் முகமது சௌஹான் சேட் மட்டுமல்லாமல் பல்வேறு நபர்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனால் தற்போது அரிசி கடத்தல் வழக்கு ஒருங்கிணைந்த குற்ற அமைப்பு என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்படவுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications