ஹேப்பி நியூஸ்.. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000.. விரைவில் அரசாணை.. அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு
திண்டுக்கல்: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். மக்களின் நலனுக்காக ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது.

14 வகை மளிகைப் பொருட்கள்
இந்த 14 வகை மளிகை பொருட்கள் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 99 சதவீதம் வழங்கப்பட்டு விட்ட நிலையில் விடுபட்ட நபர்களையும் கண்டறிந்து பொருட்கள் வழங்கப்படும்.

விரைவில் அரசாணை
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கொண்டு வருவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார். எந்த ஒரு குறைபாடும் இல்லாமல் அந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

குடிநீர் பிரச்சினை
ஜெய்ஹிந்த் பேச்சு விவகாரம் குறித்து முதல்வர் விளக்கி இருக்கிறார். ஊராட்சிகளில் போதுமான அளவு குடிநீர் இருக்கிறது. குடிநீர் முழுமையாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கருணாநிதி தொலைநோக்கு பார்வை
2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் 4 ஆயிரம் மெகாவாட் அனல் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் 2010ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. தமிழகத்தில் தொலைநோக்கு மின்சார திட்டத்தின் பிதாமகன் கருணாநிதிதான். தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திமுக தேர்தல் வாக்குறுதிகள்
ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில், டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டத்திற்கு முதல்வர் கையெழுத்திட்டு அது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications