இஸ்லாமியர்கள் என்ன தீவிரவாதிகளா? சிவகார்த்தியேன், கமல் படங்கள் எரிப்பு! எஸ்டிபிஐ கட்சியினர் கைது!
திண்டுக்கல்: இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாகக் கூறியும், அமரன் திரைப்படத்தை தடை செய்யக் கோரி திண்டுக்கல் ராஜேந்திரா திரையரங்கம் முன்பாக நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் கமல்ஹாசன் உருவப்படத்தை எரித்து எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியானது.

கல்லூரி காலம் முதல் ராணுவத்தில் இணைந்து வீர மரணம் அடைந்தது வரையிலான மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இளம் வயது இளைஞராகவும், ராணுவ மேஜராகவும் தனது தேர்ந்த நடிப்பை சிவகார்த்திகேயன் வழங்கியிருந்தார்.
மேலும் இந்துவின் அற்புதமான கேரக்டரை சாய்பல்லவி தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார். தற்போது இந்த படம் பெரு வெற்றி பெற்றிருக்கும் நிலையில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இந்த நிலையில் படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு பிறகு படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. படத்தில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகம் முற்றுகையிடப்பட்டதோடு போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அமரன் படம் வெளியாகி இருக்கும் தியேட்டர்கள் முற்றுகையிடப்படும் என எஸ்டிபிஐ கட்சி அறிவித்தது. இதை அடுத்து அந்த படம் வெளியாகி உள்ள தியேட்டர்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சி வெறுப்பு அரசியல் செய்வதாகவும், அமரன் திரைப்படம் வெளியாகி உள்ள தியேட்டர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள தியேட்டர்களில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள அமரன் திரைப்படத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து மத நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக இருப்பதாகவும் எனவே இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என திண்டுக்கல்லில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியில் உள்ள ராஜேந்திரா திரையரங்கத்தை எஸ்டிபிஐ கட்சியினர் கோஷங்கள் எழுப்பியவாறு முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அவர்கள் கொண்டு வந்த நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் உருவப்படத்தை தீவைத்து எரித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து பேருந்தின் மூலம் அழைத்துச் சென்றனர்.

இதேபோல், கோவையில் புகழ்பெற்ற சாந்தி திரையரங்கை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை இட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமரன் திரைப்படம் வெளியாகி உள்ள திரையரங்குகளை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications