திண்டுக்கல் தம்பிக்கு உடம்பெல்லாம் மூளை.. நடுரோட்டில் மல்லாந்து படுத்து என்ன செய்கிறார் என்று பாருங்க
திண்டுக்கல்: அண்மையில் கோவை செல்வபுரத்தில் ரீல்ஸ் மோகத்தில் போலீஸ் ஸ்டேஷன் முன்பே ஏடாகூடமாக பேசிய இளைஞர் இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார். இந்நிலையில் திண்டுக்கல்லில் ரீல்ஸ் மோகத்தில் இளைஞர் ஒருவர் கொளுத்தும் வெயிலில் நடுரோட்டில் படுத்து வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்த வாகன ஓட்டிகள் ரீல்ஸ் மோகத்தை கண்டு கடுப்பாகி பேஸ்புக் ஓனரை திட்டியபடி அங்கிருந்து சென்றனர்.
பேஸ்புக்கிலும், யூடியூப்பிலும் வீடியாக்கள் பதிவிட்டு அதிகப்படியான பேரை பார்க்க வைத்தால் பணம் கிடைக்கிறது என்பதால், பலரும் வீடியோக்கள் எடுத்து வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இன்ஸ்டாகிராமிலும் இந்த வீடியோக்களுக்கும் ரீல்ஸ்களுக்கும் நிறைய வரவேற்பு உள்ளது. இதனால் இன்றைய 2 கேட்ஸ் இளைஞர்கள் பலர், ரீல்ஸ் மோகத்தால் பல வீடியோக்களை வித்தியாசமான முறையில் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.

மற்றவர்களின் கவனத்தை பெறுவதற்காக ஓடும் ரயில் முன் செல்ஃபி எடுப்பது, வாளால் கேக் வெட்டுவது, போலீஸையே மிரட்டுவது, போலீஸ் ஸ்டேஷன் முன்பு , நீதிமன்றம் முன்பு ஆவேசமாக பேசி வீடியோ போடுவது, ரவுடி போல் போஸ் கொடுத்து வீடியோ போடுவது என வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை எடுக்கிறார்கள். அப்படித்தான் கோவையைச் சேர்ந்த 2கே கிட்ஸ் இளைஞர் ஒருவரின் வீடியோ அண்மையில் வெளியாகியது.
கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற கல்லூரி மாணவருக்கு கு ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவதில் ஆர்வம் அதிகம். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை இவர் அடிக்கடி பதிவிட்டு வந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயுதத்துடன் கேக் வெட்டுவது போன்ற வீடியோவை பதிவிட்டு வந்தார்.
இதனை கண்ட கோவை செல்வபுரம் போலீசார் சந்தோஷ்குமாரை அண்மையில் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து, இனிமேல் இதுபோன்று வீடியோக்களை வெளியிடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்திருந்தார்கள். போலீஸ் எச்சரிக்கையை மீறி சந்தோஷ்குமார் செல்வபுரம் போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டு, அங்குமிங்கும் சென்றபடி, "நானும் ரவுடிதான். எங்களை கேட்காமல் யாரும் செல்வபுரத்திற்குள் நுழைய முடியாது. எவன் வந்தாலும் காலை வெட்டுவோம்" என்று வீடியோ பதிவு செய்தாராம். தொடர்ந்து அவர் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவியதால், அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்பட 3 பிரிவுகளின்கீழ் சந்தோஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து சந்தோஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் நடந்த அடுத்த இரண்டாவது நாளில் திண்டுக்கல்லில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல்லில் நேற்று மதியம் வெயில் உக்கிரமாக இருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் ரவுண்டுரோட்டில் கொளுத்தும் வெயிலில் ஒரு இளைஞர், ஒரு காலின் மேல் மற்றொரு காலை போட்டப்படி ஒய்யாரமாக மல்லாந்து படுத்து கிடந்தார். இதனை கண்ட வாகன ஓட்டிகள் அருகில் சென்று பார்த்தனர், அங்கு மற்றொரு வாலிபர், சாலையில் படுத்திருந்தவரை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அப்போது தான், வாலிபர் ரீல்ஸ் மோகத்தில் கொளுத்தும் வெயிலில் சாலையில் படுத்து கிடப்பது அவர்களுக்கு தெரியவந்தது. இதனை கண்ட வாகன ஓட்டிகள், இப்படியுமா இளைஞர்கள் இருப்பார்கள். எல்லாம் பேஸ்புக் ஓனரை சொல்லனும் என்று திட்டியபடி சென்றார்கள்.
தமிழ்நாட்டின் பல்வேறு பரபப்பான மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரீல்ஸ் வீடியோ எடுப்பது அதிகரித்து வருகிறது. இதேபோல் ப்ராங் வீடியோ எடுத்து வெளியிடுவது, அதற்காக பொமக்களிடம் அத்துமீறுவதும் நடக்கிறது. ரீல்ஸ் மோகத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications