இதுதான் தமிழ்நாடு! தேவாலய வளாகத்தில் தொழுத இஸ்லாமியர்கள்.. திண்டுக்கல் ஹிஜாப் மாநாட்டில் நெகிழ்ச்சி
திண்டுக்கல்: பழனியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திய சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
Recommended Video
கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அம்மாநில அரசு விதித்த தடை தொடரும் என கடந்த மாதம் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை தொடர்ந்து ஹிஜாப் அணிய மீண்டும் அனுமதி வழங்கக்கோரி நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தொடரும் ஹிஜாப் போராட்டம்
தமிழ்நாட்டிலும் இஸ்லாமிய இயக்கங்கள், மதசார்பற்ற கட்சிகள் போராட்டங்களையும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன. அந்த வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தமிழ்நாடு முழுவதும் ஹிஜாப் உரிமை மீட்பு மாநாட்டை நடத்தி வருகிறது. இதில் மதசார்பற்ற கட்சி நிர்வாகிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநாடு
அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நேற்று ஹிஜாப் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இதில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்த கர்நாடக அரசின் உத்தரவை கண்டித்தும் அரசியலமைப்புச் சட்டங்கள் வழங்கிவரும் உரிமைகளுக்கு எதிராக ஹிஜாப் விஷயத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கூறியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்
திண்டுக்கல் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கர்நாடக அரசை கண்டித்தும் ஹிஜாபுக்கு அனுமதியளிக்கவும் வலியுறுத்தினர். மேலும் ஹிஜாப் தடையை எதிர்த்து சட்டப்பூர்வமாகவும் ஜனநாயக ரீதியிலாகவும் போராட்டங்களை முன்னெடுத்து வரும் கர்நாடக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் ஒவ்வொரு குடிமகனும் ஆதரிக்க வேண்டும் என்று போராட்டத்தில் கேட்டுக்கொண்டனர்.

தொழுகைக்கு தேவாலயம் தந்த கிறிஸ்தவர்கள்
மாநாடு ஒருபக்கம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இடையில் தொழுகைக்கான நேரம் வந்தது. ஆனால், மாநாடு நடைபெற்ற திடல் அருகே மசூதிகள் இல்லை. இதனால் எங்கு தொழுவது என்று தெரியாமல் இருந்த இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்தவர்கள் உதவி செய்ய முன்வந்தனர்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாநாடு நடைபெற்ற திடல் அருகே அமைந்திருந்த கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக தொழுகை நடத்த கிறிஸ்தவ மக்கள் சிறப்பு ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதனை தொடர்ந்து எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இஸ்லாமியர்கள் தேவாலயத்தில் கூட்டாக தொழுகை நடத்தினர்.

தமிழ்நாடு மதநல்லிணக்க மண்
மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தேவாலயத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியது காண்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதனை ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இதுதான் தமிழ்நாடு என கருத்திட்டு வருகின்றனர். இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஹிஜாப் போராட்டத்தின்போது அவ்வழியாக இந்துக்களின் காவடிக்கு வழிவிட்டதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications