நெஞ்சே பதறுதே.. ஸ்கேனில் காத்திருந்த அதிர்ச்சி! பள்ளி சிறுமி கர்ப்பம்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அடுத்தடுத்த நாட்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 18 வயது வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள், பெற்றோர்கள் சமூக ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.
குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்கள், பணியாளர்கள் மாணவிகளிடம் அத்துமீறும் சம்பவங்களும், நெருங்கிய உறவினர்கள் கூட சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கும் நிலையில் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் இரண்டு உயிர்கள் பறிபோகி இருக்கிறது.

தனது மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகில் தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 13 வயது மகளும் 10 வயது மகனும் இருக்கிறார்கள். இருவரும் அப்பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் படித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் 13 வயது சிறுமிக்கு தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனை அடுத்து அந்த சிறுமியை பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாணவி வயிறு வலிப்பதாக கூறியதால் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், இது குறித்து அந்த சிறுமியிடம் கேட்டனர். அப்போது ஒரு இளைஞர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக சிறுமி கூறினார்.
இதனையடுத்து இது தொடர்பாக சானார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது தொடர்பாக அந்த காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து சிறுமி சுட்டிக் காட்டிய இளைஞரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் அதன் முடிவுகள் வராததால் இளைஞர் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் சிறுமி பள்ளிக்கும் செல்வதில்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்து சிறுமியின் நிலை குறித்து பலரும் கேட்டதால் சிறுமியின் தாய் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து மனைவியின் உடலை உறவினர்களுடன் சேர்ந்து கணவன் அடக்கம் செய்திருக்கிறார். தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை, தனது மனைவியும் இறந்து விட்டார் என அந்த தந்தை மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி தனியாக வீட்டில் இருந்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற சின்னாளப்பட்டி போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோரின் மரணத்திற்கு காரணம் காவல் துறையினரின் அலட்சியம் தான் எனவும், உரிய விசாரணை நடக்காத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications