புது காரு.. பைக்கு, ஐபோனு.. உளுந்தூர்பேட்டை மகேந்திரவர்மனுக்கு இப்படியொரு யோகம்.. கடைசியில் ட்விஸ்ட்
திண்டுக்கல்: தமிழ் சினிமாவில் மிகப்பிரபலமாக உள்ள சினிமா பாடகரின் பெயரில் பேஸ்புக்கில் காதல் வலை வீசி பெண்ணை திருமணம் செய்வதாக ரூ.24 லட்சம் மோசடி செய்த இளைஞரை திண்டுக்கல் போலீசர் கைது செய்தனர்.
சமூக வலைத்தளத்தில் மூழ்கி கிடந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 45 வயது பெண் லலிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஆன்லைனில் சினிமா பாடகரின் பெயரில் வீசப்பட்ட வலையில் விழுந்து பணத்தை இழந்துள்ளார். லலிதாவின் கணவர் வடமாநிலத்தில் வேலை செய்கிறார். இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் மகன் மற்றும் மகள் உள்ளனர். கணவர் வெளியூரில் இருப்பதால் மகன், மகளுடன் லலிதா வசித்து வந்துள்ளார்.

வெளியூரில் இருக்கும் கணவருடன் லலிதா அடிக்கடி செல்போனில் பேசி வந்த நிலையில், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் வந்த நட்பு வட்டங்களை ஏற்றுக் கொண்டு சமூக வலைத்தளங்களிலேயே 24 மணி நேரமும் லலிதா இருந்துள்ளார்.
சினிமா பாடகர்: இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக்கில் பிரபல சினிமா பாடகரின் பெயரில் இருந்த கணக்கில் இருந்து பிரெண்ட் ரெக்வஸ்ட் லலிதாவிற்கு வந்துள்ளது. இதையடுத்து அந்த பாடகர் குறித்து கூகுளில் தேடி பார்த்துள்ளார் லலிதா. அதில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்பட பல மொழிகளில் அந்த சினிமா பாடகர் பாடல்களை பாடியது தெரிந்தது.
இதையடுத்து பேஸ்புக்கில் சினிமா பாடகரின் நட்பு கிடைத்த மகிழ்ச்சியில் லலிதா, தன்னுடைய பல்வேறு தகவல்களை மெசேஜில் பரிமாறினார். பின்னர் வாட்ஸ்-அப் மூலமும் இருவரும் உரையாடி உள்ளார்கள். அப்போது அந்த நபர், சினிமாவில் பாடல்களை பாடுவதற்கு வெவ்வேறு நகரங்களுக்கு செல்வதால் பரபரப்பாக இருப்பதாக ஏமாற்றி உள்ளார். காதல் உரையாடல்களும், மயக்க வைக்கும் பேச்சுகளால் அந்த சினிமா பாடகரின் வலையில் லலிதா விழுந்தார். ஒரு கட்டத்தில் லலிதாவை திருமணம் செய்ய விரும்புவதாக சினிமா பாடகரின் பெயரில் இருந்த நபர் கூறியுள்ளார். இதனிடையே நாடு முழுவதும் பிரபலமான பாடகர் தன்னை திருமணம் செய்ய விரும்புவதை நினைத்து அந்த பெண் சந்தோஷப்பட்ட அவர், திருமணமாகி கணவர், மகன், மகள் இருப்பதை மறைத்து சம்மதமும் கூறியுள்ளார்.
காதல் மொழியில் விழுந்த லலிதாவிடம் திருமணம் செய்து கொண்டு புதிய வீட்டில் குடியேற வேண்டும் என்றும், அதுவும் காதலிக்கும் போது காதலி வாங்கி கொடுத்த வீடாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று வலை விரித்துள்ளார். அதையும் நம்பிய லலிதா காதல் மோகத்தில் உண்மை என நம்பினார். ஒருமுறை கூட நேரில் பார்க்காத சினிமா பாடகருக்கு பல்வேறு தவணைகளில் ரூ.24 லட்சத்து 19 ஆயிரத்தை அனுப்பி உள்ளார்.
பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் பாடகர் திருமணம் செய்யாமல், தொடர்ந்து பணம் கேட்பதிலேயே குறியாக இருந்ததால் முதல்முறையாக லலிதாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் சினிமா பாடகர் அல்ல.. யாரோ ஏமாற்றி உள்ளார் என்பதை அறிந்த லலிதா அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உடனடியாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தார். அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சைபர் கிரைம் போலீசாருக்கு திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன் உத்தரவிட்டார்.
போலி சினிமா பாடகர் கைது: அதன்பேரில் கூடுதல் எஸ்பி சந்திரன் தலைமையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் பிரபல சினிமா பின்னணி பாடகரின் பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி அந்த பெண்ணை மோசடி செய்த நபர் உளுந்தூர்பேட்டை மகேந்திர வர்மன் என்பது தெரியவந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த 34 நபரான மகேந்திர வர்மனை தேடி சென்று, திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சொகுசு வாழ்க்கை: விசாரணையில் மகேந்திர வர்மன், 45 வயதாகும் லலிதாவிடம் சினிமா பாடகர் போல் பேசி, திருமண ஆசை காட்டி, பணத்தை வாங்கி கார், ஸ்கூட்டர், ஐபோன்களை வாங்கி ஊர், ஊராக சுற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த கார், ஸ்கூட்டர், 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தார்கள். முன்னதாக 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் ஒரு பெண்ணை, இதே பாணியில் மோசடி செய்து மகேந்திர வர்மன் கைதாகி இருந்தார். இப்போது திண்டுக்கல் பெண்ணை ஏமாற்றி கம்பி எண்ணி வருகிறார்.












Click it and Unblock the Notifications