இந்த துயரத்துக்கு முடிவில்லையா? அடர் வனத்தில் ஆபத்தான பயணம்.. டோலியில் தூக்கி சென்றும் பறிபோன உயிர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளகெவி கிராமத்தில் சாலைவசதி இல்லாததால், உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை டோலி கட்டி சுமார் ஆறு கிமீ தூரம் ஆபத்தான ஒற்றையடி பாதையில் கிராம மக்கள் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். இருந்த போதும், சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் மாரியம்மாள் என்ற பெண் இதே போல டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் சாலை வசதி இல்லாததால் இதுபோல உயிரிழப்புகள் தொடர்வதாக புலம்புகின்றனர் அந்த பகுதி கிராம மக்கள்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலக அளவில் பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது. அதனால் அங்கு பல வசதிகள் கொட்டிக் கிடப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கொடைக்கானல் பகுதியில் மட்டும் தான் அந்த நிலை.

மேல் மலைப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்கள் பலவற்றுக்கு இன்று வரை சாலை வசதியும், மின்சார வசதியும் அறவே கிடையாது. அவசர காலங்களில் கூட கொடைக்கானல் அல்லது பெரியகுளத்துக்கு செல்ல கால்நடையாகவே பயணிக்க வேண்டும். அப்படிப்பட்ட பகுதிதான் வெள்ளக்கெவி.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர்,பெரியூர்,சின்னூர் காலனி,கடப்பாறை குழி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாத காரணத்தினால் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இருந்து கரடு முரடான வனப் பகுதியினை கடந்து சென்றும் தங்களது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், மருத்துவமனையில் சிகிச்சை, அவசர கால தேவை உள்ளிட்ட இதர தேவைகளுக்கு பெரியகுளம் பகுதியை பயன்படுத்துவது வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மேலும் முறையான சாலை வசதி இல்லாத காரணத்தினால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட மக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை டோலி கட்டி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுமந்து கொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதித்து வருகின்றனர். இதில் ஒரு சில சமயங்களில் உயிர் இழப்புகளும் ஏற்பட்டதாக இப்பகுதி கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக 400 வருடங்களுக்கு முன்பே தோன்றியது வெள்ளகெவி கிராமம் என அப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர்
இந்த கிராமத்திற்கு செல்வதற்கு காலம் காலமாக போதிய சாலை வசதி இல்லாததால் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான ஒத்தையடி பாதையில் அடர்ந்த வன பகுதிக்கு நடுவே கிராம பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். மேலும் வெள்ளகெவி கிராமத்தில் இருந்து அவசர தேவைக்கு கும்பக்கரை அருவி வழியாக பெரியகுளம் செல்வதற்கும் 6 கிலோ மீட்டர் தூரம் வன பகுதிகளின் நடுவே ஆபத்தான முறையில் நடந்து செல்ல வேண்டும்.
மேலும் இங்கு விளைவிக்கும் விளை பொருட்களையும், அத்தியாவசிய பொருட்களையும் தலை சுமையாகவும் , பொதி சுமக்கும் குதிரைகள் மூலம் கொண்டு சென்று விற்று தங்களது வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாத காரணத்தினால் மகப்பேறு காலங்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்களை டோலி கட்டி அடர்ந்த வனப் பகுதிக்குள் ஒத்தையடி பாதையில் கொண்டு வரும் போது சிலர் உயிரிழந்தாகவும் அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று வெள்ளகெவி கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரின் மனைவி மேகலா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த பகுதியில் மருத்துவ வசதி இல்லாத நிலையில் நேற்று இரவு அப்பகுதி கிராம மக்கள் அடர்ந்த வன பகுதிகளுக்கு இடையே மேகலாவை டோலி கட்டி கும்பக்கரை வழியாக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இரவு நேரத்தில் ஆபத்தான வழியிலும் , ஆற்றை கடந்தும், வன விலங்குகளின் அச்சுறுத்தல் இடையே உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மிகவும் சிரமப்பட்டு கொண்டு சென்றுள்ளனர்.
துரதிருஷ்டவசமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சில நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இது போல அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் தனி தீவாக இப்பகுதி மக்கள் இருந்து வரும் நிலையில், இது குறித்து பல முறை அரசுக்கு எடுத்துரைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாரியம்மன் என்ற பெண் இதேபோல டோலிக்கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். அப்போதிருந்த மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என பழனி சார் ஆட்சியர் தலைமையில் குழு அமைப்பு உத்தரவிட்டிருந்தார். அதற்கு பிறகு அந்த குழு என்ன ஆனது என்றே தெரியவில்லை. தற்போது திண்டுக்கல்லுக்கு புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிமேலாவது அந்த கிராமத்திற்கு சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.












Click it and Unblock the Notifications