திண்டுக்கல் மருத்துவமனையில் அனைவரையும் மீட்டதாக நிம்மதி அடைந்த வீரர்கள்.. லிப்டை திறந்தால்!
திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு 9 மணி அளவில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம். மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் அனைவரையும் மீட்டுவிட்டோம் என்று தீயணைப்பு வீரர்கள் நிம்மதி அடைந்த நிலையில் தான், அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. லிப்டில் என்று ஓடி பார்த்த போது, அதிகாரிகள் ஆடிப்போனார்கள்..
திண்டுக்கல் காந்திஜிநகர் திருச்சி சாலையில், ரயில்வே மேம்பாலம் அருகே சிட்டி என்ற தனியார் மருத்துவமனை 4 மாடியில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தரைத்தளத்தில் வரவேற்பு அறை, மருத்துவர்கள் அறை அமைந்திருக்கிறது. இதன் முதல் மாடியில் தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 2-வது மாடியில் அறுவை சிகிச்சை அரங்கும் நோயாளிகள் வார்டும் இருந்தது. 3-வது மாடியில் நோயாளிகள் வார்டு இருந்து. 4-வது மாடியில் மருத்துவமனையில் வேலை செய்யும் பணியாளர்களின் அறைகள் இருந்தது.

இந்நிலையில் மருத்துவமனையில் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென வரவேற்பு அறையில் இருந்து 'டமார்’ என பயங்கர சத்தத்துடன் தீப்பொறி எழுந்தது.அதன்பின்னர் மின்னல் வேகத்தில் அங்கிருந்த கணினிகள், மின்சார வயர்கள் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட ஊழியர் ஒருவர் உடனடியாக விரைந்து சென்று மருத்துவமனையின் கீழ்தளத்திற்கு சென்று மின்சார இணைப்பை துண்டித்தார்.
அதேநேரம் தரைத்தளத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. உடனேமருத்துவமனை ஊழியர்கள் சேர்ந்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ மளமளவென பிடித்து முதல்மாடிக்கு பரவ தொடங்கியது. தீயை அணைக்க முடியாத நிலையில், திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு மருத்துவமனை ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.
ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாகவே தரைத்தளம், முதல் மாடி முழுமையாக தீயில் சிக்கியது. மின்சாரம் வேறு துண்டிக்கப்பட்டதால் மருத்துவமனை முழுவதும் இருள் சூழ்ந்தது. இதனால் பல நோயாளிகள் உடனடியாக வெளியே வரமுடியாமல் பரிதவித்தனர். மாடிப்படி வழியாக நோயாளிகளும், உறவினர்களும் வெளியேறினார்கள். 4-வது மாடியில் இருந்த பெண் பணியாளர்கள் வெளியேற முடியாமல் தவித்து நின்றனர்.
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒருவழியாக தீ அணைக்கப்பட்டது. அதையடுத்து ஆஸ்பத்திரி உள்ளே சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் இறங்கினார்கள். ஏணி மூலம் முதல் மாடியில் கண்ணாடி ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நோயாளிகளை மீட்டார்கள். இந்த தீயணைப்பு மீட்பு பணியில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களும் ஈடுபட்டனர். இதனிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டு உடனடியாக திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, திண்டுக்கல் எஸ்பி பிரதீப் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகள் கொண்டு செல்லப்பட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட இரவு 9 மணிக்கு தொடங்கிய மீட்பு பணி 10.30 மணி வரை நீடித்தது. தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 2, 3-வது மாடிகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் வெளியே மீட்கப்பட்டனர். இதேபோல் 4-வது மாடியில் இருந்த பணியாளர்களும் கீழே அழைத்து வரப்பட்டார்கள். ஒருவழியாக அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக தீயணைப்பு வீரர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனாலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 'லிப்டு’ நடுவழியில் நிற்பது தெரியவந்தது. இதனால் லிப்டுக்குள் நோயாளிகள் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் தீயணைப்பு வீரர்களுக்கு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் லிப்டை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பின்னர் 'லிப்டு’ உடைக்கப்பட்டது. அப்போது லிப்டுக்குள் இருந்த 4 பேர் மயங்கி கிடந்தனர். இதையடுத்து மயங்கி கிடந்த 4 பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள், புகையால் மயங்கி விழுந்தவர்கள் உள்பட மொத்தம் 32 பேர் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அதில் பரிசோதனை செய்ததில் ஒரு சிறுமி, 2 பெண்கள், 3 ஆண்கள் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. 3 முதியவர்கள் உள்பட 26 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications