"இவரும்" அங்கே போக போறாரா?.. பாஜகவை விடாமல் புகழும் மாஜி.. குழம்பும் அதிமுக கூடாரம்
சைதை துரைசாமி பாஜக பக்கம் சாய போகிறாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது
திண்டுக்கல்: "சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு எம்ஜிஆர் பெயரை வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கும், அப்போதைய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடமும் கோரிக்கை வைத்தோம்... எங்கள் கோரிக்கையை நிறைவேற்றியவர் பிரதமர் மோடி" என்று சென்னை முன்னாள் மேயரும், உலக எம்ஜிஆர் பேரவை தலைவருமான சைதை துரைசாமி புகழாரம் சூட்டி உள்ளார்.
திண்டுக்கல்லில், "அனைத்துலக மனிதநேய மாணிக்கம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., பக்தர்கள் குழு" அறக்கட்டளை சார்பில், எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டுபேசிய சைதை துரைசாமி, "என் மறைவிற்கு பின்னால், எத்தனை பேர் பிறந்த நாள் விழா கொண்டாடுகின்றனர் என்பதில் தான், நான் பிறந்து வாழ்ந்ததற்கான அர்த்தம் இருக்கிறது என்றவர் எம்ஜிஆர்.. அதை இப்போது திண்டுக்கல்லில் எம்ஜிஆர் ரசிகர்கள் நிரூபித்து வருகின்றனர்.

அவதார புருஷன்
அவர் வாழ்ந்து மறைந்த பிறகும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பதால் தான், 'அவதார புருஷன்' என அழைக்கிறோம்... தன்னுடைய 5 வயதில் சாப்பாடு இல்லை என்பதற்காக நாடக உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்... பல சவால்களை கடந்து வந்தவர் எம்ஜிஆர்.. நாடகத்தின் போது நடிகர் குண்டுமணி எம்ஜிஆர் மீது விழுந்தார்... காயத்தில் இருந்து அவர் மீண்டு வருவது சிரமம் என்றனர். ஆனால், பிறகு தான் அவர் வீறு கொண்டு எழுந்து, சினிமாவில் சிகரம் தொட்டார்.

எம்ஜிஆர் புகழ்
அது மட்டுமல்லாது எம்ஆர்.ராதா அவரை சுட்டபோது, "அவ்வளவு தான் இனி பேச்சு வராது" என்றனர்.. அதை பொய்யாக்கி வெற்றி படங்களை கொடுத்தார். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவதில், எம்ஜிஆருக்கு இணை அவர் மட்டும்தான்... அரசியலில் வெற்றி பெற்று ,தொடர்ந்து மூன்று முறை முதல்வராக பதவி வகித்தார். இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. 1980ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன்.

சென்னை மேயர்
அப்போது எம்ஜிஆர், என்னை அழைத்து, "கவலைப்படாதே. அதிமுகவின் முதல் மேயர்' என்றார். அவரது வாக்கு பலித்து 2011ல் நான் சென்னை மேயரானது கவுன்சிலர்களால் அல்ல. மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டேன். சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு எம்ஜிஆர் பெயரை வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கும், அப்போதைய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடமும் கோரிக்கை வைத்தோம்.

கோரிக்கை
எங்கள் கோரிக்கையை மோடி நிறைவேற்றினார். நான் சென்னையின் மேயராக 5 ஆண்டுகள் பதவியில் இருந்தேன். ஊழலற்ற நேர்மையான மேயராக வாழ்ந்து வெளியே வந்திருக்கிறேன். நான் அரசியல்வாதி அல்ல. மற்றவர்களுக்காக வாழும் ஒரு சேவையாளன், என்றுமே எம்ஜிஆர் தொண்டன்" என்றார். சைதை துரைசாமியின் இந்த பேச்சு மறுபடியும் ஒரு குழப்பத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

பாஜக
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மன்கிபாத் 'மனதின் குரல்' என்ற பெயரில் தமிழ்நாடு பாஜக சார்பில் நூல் தொகுப்பு ஒன்று சென்னையில் வெளியிடப்பட்டது.. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மனதின் குரல் புத்தகத்தை வெளியிட முன்னாள் மேயர் சைதை துரைசாமி முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.. அதிமுகவின் சீனியர் தலைவரான சைதை துரைசாமி, பாஜகவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுதான் முக்கிய டாக் ஆனது,

நெருப்புடா... அண்ணா
இந்த மேடையில் பேசிய அவர், அண்ணாமலை ஒரு " நெருப்பு".. அண்ணா என்றால் நெருப்பு என்று பொருள்.. அதனுடன் மலையும் சேர்ந்து இருக்கிறது.. அப்படின்னா, உங்கள் தலைவர் ஒரு நெருப்பு, அண்ணாமலை அவர்கள் திராவிட இயக்க தலைவர்களை போல பேசக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கிறார்" என்று புகழ்ந்து பேசியிருந்தார். அதிமுக மூத்த தலைவர் திடீரென பாஜகவை புகழவும், ஒருவேளை பாஜகவுக்கு இவர் தாவ போகிறாரோ என்ற சந்தேகம் வந்தது.. அதனால், இந்த சந்தேகத்தை செய்தியாளர்கள் நேரடியாகவே, சைதை துரைசாமியிடம் கேட்டுள்ளனர்..

இலவச ஐஏஎஸ்
அதற்கு அவர், "நான் ஒரு கல்வியாளராக பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறேன்... இலவச ஐஏஎஸ் அகாடமி நடத்துவதால் பல்வேறு கட்சியினர் என்னை நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது வழக்கம்.. அப்படித்தான் பாஜக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டேன்... 14 வயது முதல் எம்ஜிஆரின் கைகளை பிடித்து நடந்த நான் எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன்.. எனவே எனக்கு தேவையற்ற அரசியல் சாயத்தை பூசாதீங்க" என்று கொந்தளித்திருந்தார். இப்போது எம்ஜிஆர் விழா மேடையில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசவும் மறுபடியும் சில அதிமுகவினருக்கு சந்தேகம் வந்துவிட்டது..

நிச்சயம் இல்லை
ஒருவேளை கூட்டணியில் உள்ளதால் பிரதமர் பற்றி உயர்வாக கூறினாரா? அல்லது மரியாதையின் நிமித்தமாக கூறினாரா? அல்லது அதிமுகவில் நிலவி கொண்டிருக்கும் குழப்பத்தை பார்த்து பாஜகவில் இணைய போகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. சைதை துரைசாமியை பொறுத்தவரை, மனிதநேயம் அறக்கட்டளை என்ற பெயரில் இந்திய குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி மையம் நடத்தி வருபவர்.. எத்தனையோ மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவி கொண்டிருப்பவர்.. அன்று முதல் இன்றுவரை எம்ஜிஆர் ரசிகர் என்பதை நிரூபித்து கொண்டே இருப்பவர்.. இவ்வளவு பிடித்தம் உள்ளவர் நிச்சயம் மாற்று கட்சிக்கு போக வாய்ப்பே இல்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்..!












Click it and Unblock the Notifications