மண்டையை பொளக்கும் வெயில்.. துபாய் தொழிலாளர்களுக்கு உச்சி வெயிலில் குட்டி பிரேக்! சூப்பர் அறிவிப்பு
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை காலத்தின் கடும் வெப்பத்திலிருந்து வெளிப்புறத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, ஒவ்வோர் ஆண்டும் நடைமுறைப்படுத்தப்படும் 'நண்பகல் நேர வேலை நிறுத்த' உத்தரவு இந்த ஆண்டும் அமலுக்கு வந்துள்ளது.
ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். மதியம் 12:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை நேரடி சூரிய ஒளியின் கீழ் அல்லது திறந்தவெளியில் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொளுத்தும் வெயில்
அமீரகத்தில் கோடை காலத்தில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்குவதால், தொழிலாளர்களுக்கு ஏற்படும் வெப்ப அயற்சி (Heat exhaustion), பக்கவாதம் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்ற உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்க சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உச்சி வெயில் நேரங்களில் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு குட்டி பிரேக் விடுக்கப்பட்டிருக்கிறது.
நிறுவனங்களுக்கான விதிமுறைகள்
- வேலை நிறுத்த நேரத்தின் போது தொழிலாளர்கள் ஓய்வெடுக்க நிழற்குடைகள் அல்லது குளிர்சாதன வசதி கொண்ட இடங்களை நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
- குடிநீர், எலக்ட்ரோலைட் பானங்கள் மற்றும் முதலுதவி வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- வேலை நேரத்தை காலை மற்றும் மாலை என இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விதிமீறல்களுக்கான அபராதம்
இந்த உத்தரவை மீறி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும். அதாவது, விதிமீறலில் ஈடுபடும் ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சமாக 50,000 திர்ஹம் (ரூ.12.84 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
விதிவிலக்குகள்
இவ்வளவு கடுமையான விதிமுறைகள் இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சில பணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தார் ஊற்றுதல் மற்றும் கான்கிரீட் வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளில் ஏற்படும் அவசரப் பழுதுபார்ப்புப் பணிகள், போக்குவரத்து பாதிப்புகளைச் சரிசெய்யும் அவசரப் பணிகளை செய்யும் தொழிலாளர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், இந்தப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு வசதிகளை நிறுவனங்கள் செய்து தர வேண்டும்.
டெலிவரி ஊழியர்களுக்கான வசதி
இந்த ஆண்டு டெலிவரி ஊழியர்களுக்காக அமீரகம் முழுவதும் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட ஓய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மெட்ரோ மற்றும் பேருந்து நிலையங்களில் கூடுதல் ஓய்வு இடங்களை உருவாக்கியுள்ளது.
இந்த மனிதாபிமான நடவடிக்கை தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதோடு, அவர்களின் உற்பத்தித் திறனையும் மேம்படுத்தும் என்று மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications