Eid al-Adha: ஒட்டுமொத்த துபாய்-க்கு ஒரு வாரம் விடுமுறை.. விமான நிலையம் முதல் டீ கடை வரை பிஸ்னஸ் அள்ளுது..!
துபாய்: துபாயில் ஈத் பண்டிகை வரும் மே 27, புதன்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு துபாய் மக்கள் நீண்ட விடுமுறையுடன் கொண்டாட தயாராகி வருகின்றனர். இதேவேளையில் துபாய் மற்றும் வளைகுடா நாடுகள் முழுவதும் வர்த்தக சந்தை கலைக்கட்டியுள்ளது.
துபாயில் தனியார் துறை ஊழியர்களுக்கு மே 26, செவ்வாய்கிழமை முதல் மே 31, ஞாயிற்றுக்கிழமை வரை 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு மே 23, சனிக்கிழமை முதல் மே 31 வரை 9 நாட்கள் நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மே 25, திங்கட்கிழமை அரசு ஊழியர்களுக்கு ஈத் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் இந்த நீண்ட வீடுமுறை கிடைத்துள்ளது.

பட்டாசு வெடித்தால் அபராதம்
ஈத் பண்டிகைக்கு முன்னதாக துபாய் போலீசார் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். பட்டாசுகளை பயன்படுத்துவதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. பட்டாசுகள் ஆபத்தானது இல்லை என்பது போல் தோன்றினாலும், அவை எளிதில் ஆபத்தானவையாக மாறிவிடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
உரிமம் இல்லாமல் பட்டாசுகளை விற்பனை செய்தல், இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்தல் ஆகியவற்றுக்கு கடுமையான தண்டனை உண்டு. இதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட சிறைத்தண்டனை அல்லது 1 லட்சம் திர்ஹம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
விமான பயணிகளே உஷார்
துபாயில் தற்போது நீண்ட விடுமுறை என்பதால் விமானப் பயணிகளுக்கு முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. எமிரேட்ஸ், எதிஹாத் ஏர்வேஸ் மற்றும் ஃப்ளைதுபாய் உள்ளிட்ட விமான நிறுவனங்கள், பயணிகள் விமான நிலையத்துக்கு 4 மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
ஈத் விடுமுறை காலத்தில் விமான நிலையங்களில் பெரும் கூட்டம் எதிர்பார்க்கப்படுவதால், ஆன்லைன் செக்-இன் மற்றும் வீட்டிலிருந்தே செக்-இன் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி, முன்கூட்டியே செக்-இன் செய்து கொள்வதன் மூலம் பயணிகள் சிரமமின்றி பயணிக்கலாம் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
துபாய் பிஸ்னஸ்
ஈத் விடுமுறைக்கு முன்னதாக துபாய் முழுவதும் வணிக நிறுவனங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. பர்யூம் கடைகள் முதல் டயர் கடைகள், பேக்கரிகள் ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அனைத்து குடும்பங்களும், இந்த பண்டிகை நாளில் குடும்பத்தினருக்கும், வீட்டில் பணியற்றும் ஊழியர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வாங்குதல், பயணங்கள் என பல வகையில் ஷாப்பிங்கில் ஈடுபட்டுள்ளனர்.
வாசனை திரவியக் கடைகளில் ஈத் பரிசுகள் விற்பனை அதிகரித்துள்ளது. வெளிநாட்டில் உள்ள உறவினர்களுக்கு பரிசுகள் அனுப்புபவர்கள் அதிகம் என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய பொருளாதாரம் மற்றும் போர் சூழலில் சிலர் செலவழிப்பதில் சற்று தயக்கம் காட்டினாலும், பெரும்பாலானோர் ஈத் கொண்டாட்டங்களுக்காக ஷாப்பிங் செய்து வருகின்றனர்.
ஈத் அல் அதா 2026-ம் ஆண்டு துபாயில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து, விமானப் பயணிகள் முன்கூட்டியே தயாராகி, வணிக நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஈத் பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சியானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமைய வேண்டும் என்று துபாய் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications