அபுதாபியை குறிவைத்து ஈரான் அட்டாக்.. வீதிகளில் சிதறிய ஏவுகணை சிதைவுகள்! இந்தியர் பலி, பலர் காயம்
துபாய்: வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்கி வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் அபுதாபியில் இந்தியர் ஒருவர் ஏவுகணை சிதைவுகள் விழுந்ததில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் தாக்குதல் நடத்த தொடங்கிய பிறகு மத்திய கிழக்கில் இதுவரை பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே மூன்று வாரத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா அறிவித்த 15 அம்ச திட்டத்தை நிராகரித்த ஈரான், தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும் ஈரான் மீது கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. பதிலுக்கு இஸ்ரேல் மீதும் ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகிறது.

ஈரான் இறங்கி வராததால், கடும் கோபம் அடைந்த டிரம்ப், அந்த நாட்டின் மீது மிகப்பெரும் தாக்குதலை நடத்தக்கூடும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசி வருகிறார்கள். இதற்கிடையே, ஈரானில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்தி கண்காணித்து வந்த கடற்படை தளபதி அலிரெசா தங்ஸ்ரீ கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எனினும் இது தொடர்பாக ஈரான் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானினின் இந்த தாக்குதலை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இஸ்ரேல் இடைமறித்து தாக்கிவருகிறது. இந்த நிலையில், அபுதாபியை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணையை ஈரான் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் இந்த ஏவுகணையை அபுதாபி இடைமறித்து அழித்தது. எனினும் ஏவுகணை சிதைவுகள் விழுந்ததில் அபுதாபியில் இந்தியர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒரு இந்தியர் காயம் அடைந்துள்ளார். இவர்கள் தவிர எமிரேட்டி மற்றும் ஜோர்டானை சேர்ந்த இருவரும் காயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானை வம்சாவளியை சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டு இருப்பதாக அபுதாபி தெரிவித்துள்ளது.
முதன்மை ஏவுகணை, பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக தடுக்கப்பட்டிருந்தாலும், அதன் பின் ஏற்பட்ட சிதறல்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுந்ததால் பெரிய அளவில் பாதிப்பும் பதற்றமும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை சமாளிக்கவும் அவசர சேவைகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன என்று அபுதாபி நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications