இங்கிலாந்து பவுலர்களை அடித்து துவைத்த தென்ஆப்பிரிக்கா..பறந்த சிக்ஸர்கள்.. அரையிறுதிக்கு தகுதி பெறுமா
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு பக்கம் இந்திய அணி பிரிவில் உள்ள இந்தியா, நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே யார் அரையிறுதிக்கு செல்வது என்பதில் போட்டி இருக்கிறது.
இதேபோல் மற்றோரு பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையே அரையிறுதிக்கு செல்வதில் பலத்த போட்டி நிலவுகிறது. இன்று முதலில் நடந்த போட்டியில் வெஸ்ட் இன்டிஸை ஆஸ்திரேலியா பந்தாடி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங்
இதனால் ஆஸ்திரேலியா நல்ல ரன் ரேட்டில் அரையிறுதி வாய்ப்பை பலப்படுத்தி கொண்டது. இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் களத்தில் சந்தித்தன. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா 60 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தினால்தான் அந்த அணியால் ஆஸ்திரேலியாவை விட ரன் ரேட்டில் அதிகம் பெற்று அரையிறுதிக்கு செல்ல முடியும். இந்த முக்கியமான போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

அதிரடி சிக்ஸர்கள்
குறைந்தது 200 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் களமிறங்கினார்கள். ஆனால் பயங்கரமாக தடுமாறிய ரீசா ஹென்ட்ரிக்ஸ் 2 ரன்னில் மொயின் அலி பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ராஸ்ஸி வான் டெர் டுசென், தொடக்க வீரர் டி காக் சிறப்பாக விளையாடினார்கள். இதில் ராஸ்ஸி வான் டெர் டுசென் அதிரடியாக சிக்ஸர்களை பறக்க விட்டார். டி காக் 34 ரன்களில் வெளியேற அடுத்து வந்தார் ஏய்டன் மார்க்ரம்.

ருத்ரதாண்டவமாடிய ஏய்டன் மார்க்ரம்
ராஸ்ஸி வான் டெர் டுசெனும், ஏய்டன் மார்க்ரமும் இங்கிலாந்தின் மார்க் வுட், கிறிஸ் வோஸ்க்ஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். இருவரும் சர்வசதாராணமாக சிக்ஸர்கள் அடித்தது மட்டுமில்லாமல் நேர்த்தியாக அடிக்கடி 2 ரன்களும் ஒடி எடுத்தனர். ராஸ்ஸி வான் டெர் டுசென் 60 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். மறு பக்கம் ருத்ரதாண்டவமாடிய ஏய்டன் மார்க்ரம் வெறும் 25 பந்துகளில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

130 ரன்களுக்குள் அடக்க வேண்டும்
இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டுமானால் இங்கிலாந்து அணியை 130 ரன்களுக்குள் வீழ்த்தி 60 ரன்கள் வித்தியாசத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications