துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது?
துபாய்: அமீரக நகரமான துபாயில் இன்று நிகழ்ந்த ஒரு கோரச் சாலை விபத்தில், இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். நடுரோட்டில் மெக்கானிக்கல் பிரச்சினையால் நின்ற லாரி மீது மினி பஸ் மோதியதே விபத்திற்குக் காரணமாகும். இதில் இந்தியத் தொழிலாளர்கள் பலரும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்தியக் கிழக்கில் இந்தியர்கள் கணிசமாக வசித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் வேலைக்காக, இந்தியாவில் இருந்து அதிகப்படியான பொதுமக்கள் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காகச் செல்கிறார்கள். அப்படி வளைகுடா நாடுகளுக்குச் செல்வோரின் இந்தியர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

விபத்து
இதற்கிடையே துபாயின் முக்கியச் சாலை ஒன்றில் இன்று ஒரு மோசமான விபத்து நிகழ்ந்துள்ளது. தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஒரு மினி பேருந்து, சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது. இதில் இந்தியர்கள் பலரும் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யார் யார்
அந்த லாரியில் ஏதோ மெக்கானிக்கல் சிக்கல் ஏற்படவே அது திடீரெனச் சாலையின் நடுவிலேயே நின்றுள்ளது. அந்தச் சமயத்தில் பின்னால் வந்த மினி பேருந்து, எதிர்பாராத விதமாக லாரியின் மீது மோதியதில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. உயிரிழந்தோர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.. அவர்களின் பெயர் உள்ளிட்ட இதர தகவல்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
என்ன நடந்தது
இது தொடர்பாக துபாய் போலீசாரின் போக்குவரத்து பிரிவு இயக்குநர் பிரிகேடியர் ஜுமா சேலம் பின் சுவைதான் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "மெக்கானிக்கல் கோளாறு காரணமாக லாரி சாலையின் நடுவே திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர், முன்னால் செல்லும் வாகனத்திற்கும் தனது வாகனத்திற்கும் இடையே இருக்க வேண்டிய பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிக்கத் தவறியுள்ளார். மினி பஸ் ஓட்டுநர் சாலையில் போதிய கவனம் செலுத்தாததே இந்த விபத்து இவ்வளவு தீவிரமாக மாறக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.
இரங்கல்
இந்தத் துயரச் சம்பவம் குறித்து துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்துள்ளது. அதில் அவர்கள், "துபாயில் நடந்த சாலை விபத்தில் இந்தியத் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி எங்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது"* என்று தூதரகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும், உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு செல்வது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தூதரகம் பணியாற்றி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications