Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலையங்கம்: சார்க் மாநாடு.. இந்தியாவுக்கு சாதனையா? சோதனையா?

Subscribe to Oneindia Tamil

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நிறைவடைந்துள்ளது 18வது சார்க் மாநாடு. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சார்க் மாநாடு சர்வதேச அளவில் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டிருக்கிறது.

சார்க் அமைப்பு என்பது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், பூடான், மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைத்தானே உள்ளடக்கியது.. இந்த நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டை சர்வதேச நாடுகள் ஏன் உன்னிப்பாக பார்க்க வேண்டும்?

சார்க் என்பது தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்புதான் (South Asian Association for Regional Cooperation). இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் இருந்தே இத்தகைய ஒரு கூட்டமைப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அப்போது இந்தியா கடைபிடித்த "அணிசேரா" கொள்கையை மையமாகக் கொண்டு இந்த கூட்டமைப்புக்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.

ஒருவழியாக 1985ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், பூடான், மாலத்தீவுகள் ஆகிய 6 தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பாக சார்க் அமைப்பு உருவானது. தெற்காசிய நாடுகளிடையே அனைத்து துறைகளிலும் நெருங்கிய ஒத்துழைப்பு, வர்த்தக உறவு என பல அம்சங்களை இலக்காகக் கொண்டது சார்க் அமைப்பு. இதற்காக ஐ.நாவைப் போல தனித்துவமான நிர்வாகக் கட்டமைப்புகளும் உண்டு.

தொடக்கத்தில் ஆண்டுக்கு ஒரு முறை கூடி விவாதித்தது சார்க். பின்னர் இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் இடைவெளிகளும் விடப்பட்டு கூட்டப்பட்டன. கடைசியாக 2011ஆம் ஆண்டுதான் சார்க் மாநாடு நடைபெற்றது. தற்போது 3 ஆண்டுகள் கழித்து நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் 18வது சார்க் மாநாடு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

சார்க் அமைப்பில் 2005ம் ஆண்டு ஒரு திருப்பம் நிகழ்ந்தது. மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானையும் இதில் இணைத்துக் கொள்ளலாம் என்று விவாதிக்கப்பட்டது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் இந்தியாவின் முன்முயற்சியில் ஆப்கானும் சார்க்கில் அங்கமானது.

அதேபோல் 2006ம் ஆண்டு முதல் "பார்வையாளர்களாக" பங்கேற்க விரும்பிய ஆஸ்திரேலியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், ஜப்பான், மொரீசியஸ், மியான்மார், தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் அடுத்தடுத்து ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

இந்த "பார்வையாளர்" ஒப்புதல்தான் தற்போதைய 18வது சார்க் மாநாட்டை பெரும் சோதனைக்குள்ளாக்கியிருக்கிறது. இதுவரையில் சார்க் அமைப்பின் 'பெரிய அண்ணனாக' இருந்து வரும் இந்தியாவை அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.. அல்லாட வைத்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு காரணம் யார்? வேறு யாராக இருக்க முடியும்...சாட்சாத் சீனாதான்.. சார்க் அமைப்பிலே இல்லாத ஒரு நாடு எப்படி இந்த மாநாட்டை சோதனைக்குள்ளாக்க முடியும்?. அதுதான் சீனா!.

சார்க் அமைப்பில் பார்வையாளராக நுழைந்த சீனா கடந்த சில ஆண்டுகளாக இதில் உறுப்பு நாடாகிவிடுவது என்று தீவிர லாபியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக தனது காலனித்துவ நாடுகளாக மாற்றி வைத்திருக்கும் பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவுகள் மூலமாக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு பார்த்தது சீனா.

China-Pakistan fails to hijack SAARC

ஆனாலும் இந்தியா இதற்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை. கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்திலேயே சீனாவை உறுப்பு நாடாக்க ஒப்புதல் தெரிவிக்க இந்தியா மறுத்துவிட்டது. ஏற்கெனவே "முத்துமாலை" என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவை சுற்றியுள்ள அனைத்து நாடுகளையும் தன் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டது சீனா.

இதை சமாளிக்க முடியாமல் அண்டை நாடுகளுக்கு ஆண்டு தோறும் பட்ஜெட்டில் நிதி உதவி ஒதுக்கியும் 'சார்க்' அமைப்பின் மூலமாக மட்டுமே சற்றே மேலாதிக்கம் செலுத்தி வருகிறது இந்தியா.

தற்போது சார்க் அமைப்புக்குள் சீனாவை ஊடுருவவிட்டால் "உள்ளதும் போச்சுடா" கதைதான் இந்தியாவுக்கு. இந்த நிலையில்தான் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது.

மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்கும் போது 'சார்க்' என்ற குடுமியை இறுகப் பிடித்துக் கொண்டுதான் பதவி ஏற்றது. அண்டை நாடுகள் அனைத்தும் எங்கே சீனா பக்கம் சாய்ந்துவிடுமோ என்ற அச்சத்திலே 'இந்திய வரலாற்றிலேயே' முதல் முறையாக பிரதமர் பதவி ஏற்புக்கு சார்க் அமைப்பின் தலைவர்கள் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.

அத்துடன் பிரதமர் மோடி முதல் முறையாக அண்டை நாடான பூடானுக்குத்தான் பயணம் மேற்கொண்டு சுமார் ரூ. 6,000 கோடி நிதி உதவியை அள்ளிக் கொடுத்தார். பூடானின் பூகோளப் பரப்பளவை வரைபடத்தில் பார்த்தால் ரூ. 6,000 கோடியை வைக்கும் அளவுக்கு கூட இடமில்லாத தேசம் என்றுதான் எண்ணத் தோன்றும்.

இதேபோல்தான் நேபாளத்துடனும் நெருங்கிய நட்புறவை வெளிப்படுத்திக் கொண்டார். இலங்கைக்குப் போகாவிட்டாலும் கூட சொந்த நாட்டு மீனவர்களை சுட்டுக் கொன்றாலும் சிறையில் அடைத்தாலும் தூக்கு மேடையில் நிறுத்தாலும் கனிவோடு பேசி தட்டிக் கொடுத்துதான் கருத்தை தெரிவித்து வருகிறது இந்திய அரசு. அதன் உள்ளர்த்தமே 'தம்பி முழுவதுமாக சீனா பக்கம் தாவிட்டா? என்ற அச்சத்தின் வெளிப்பாடுதான். இதே நிலைப்பாடுதான் மாலத்தீவுக்கும்.

இந்த நிலையில் 18வது சார்க் மாநாடு கூடும் நாள் நெருங்க நெருங்க.. இந்தியாவின் நிம்மதியை என்ன பாடுபடுத்தியது தெரியுமா சீனா?

சார்க் மாநாட்டை நடத்துகிற நேபாளத்தை அப்படியே வளைத்துப் போட்டது சீனா. முதலில் வெளியிட்ட அறிவிப்பு.. நேபாளத்துக்கு 2014ம் ஆண்டு 2018ம் ஆண்டு வரை ஒரு ஆண்டுக்கு 1.63 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்கப்படும் என்பதுதான் அது.

சார்க் மாநாடு நெருங்க நெருங்க நேபாள அரசியல்வாதிகளிடம் வெளிப்பட்ட குரல்களின் தொனியே வேறுதான்... ஆனால் அந்தக் குரல் ஒற்றை கருத்தையே வெளிப்படுத்தியது.

நேபாள நாட்டின் நிதி அமைச்சர் ராம்சரன் மகத், வெளியுறவுத் துறை அமைச்சர் மகேந்திர பகதூர் பாண்டே, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரிஜால், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ரமேஷ் நாத் பாண்டே என சகலரும் உரத்த குரலில் சொன்னது "சார்க் அமைப்பில் பார்வையாளராக உள்ள சீனாவையும் உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளலாமே" என்பதுதான்.

சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி ஏடான "Xinhua" சார்க் மாநாட்டை முன்னிட்டு 12 பக்க சிறப்பிதழை வெளியிட்டு ஆச்சரியப்பட வைத்தது. சார்க் அமைப்பிலே இல்லாத ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனத்தின் "குடுமி" சும்மாவா ஆடும்?

சார்க் மாநாடு தொடங்குவதற்கு முதல்நாள் எதிர்பார்த்தபடியே பாகிஸ்தான் பஞ்சாயத்தை கூட்டியது. சீனாவை உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளலாம் என்று பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்தது.

இதற்கு சொல்லி வைத்தாற்போல இலங்கையும் மாலத்தீவும் குரல் கொடுக்க.. நேபாளமோ "நடுநிலை" என்ற கம்பளியைப் போர்த்திக் கொண்டு முடிவுக்குக் காத்திருந்தது.

இந்தியா மீண்டும் திட்டவட்டமாக சீனாவை சேர்த்துக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டது. விளைவுதான் புதன்கிழமையன்று ஒரே மேடையில் அமர்ந்திருந்த போதும் இந்திய பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் ஒருவார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.. கை குலுக்கிக் கொள்ளவில்லை..

இதன் உச்சமாக சார்க் நாடுகளிடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வேண்டியது இருந்தது. அனைத்து நாடுகளுடம் கையெழுத்திட முன்வந்தாலும் பாகிஸ்தான் முடியாது என்று பிடிவாதம் காட்டியது.

"ஆஹா இதற்குத்தானே ஆசைப்போட்டோம் பாலகுமாரன்களா" என்று சர்வதேச நாடுகள் துள்ளி குதித்தன.. சார்க் அமைப்பு தோல்வியைத் தழுவுகிறது.. பிளவு ஏற்படப் போகிறது.. என்கிற தொனியில் கட்டுரைகளை எழுதித் தள்ளின.

அப்படி ஒன்று நடந்துவிட்டால் இந்திய பிரதமர் மோடிக்குத்தான் பெருத்த அவமானம் ஏற்படும் என்பது இந்திய லாபியிஸ்டுகள் பதற்றம்..

ஏனெனில் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக முதல் முறையாக சார்க் அமைப்பில் கலந்து கொள்கிறார். முதல் மாநாடே ஊத்திக் கொண்டால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நாடு திரும்புவது.. அதுவும் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறது என்ற உதறல் எடுத்தது..

இதனால் நேபாளத்துக்கு இந்தியத் தரப்பு நெருக்குதல் கொடுக்க... அட 3 ஒப்பந்தங்களில் வேண்டாம்.. ஒரே ஒரு ஒப்பந்தத்திலாவது கையெழுத்து போட்டு கைகுலுக்குக் கொள்ளுங்கள்.. கொஞ்சம் கவுரவமாக இருக்கும் என்று பாகிஸ்தானுடன் 'கட்டப் பஞ்சாயத்து' நடத்தப்பட்டது.

இதன் விளைவாக கடைசி நாளில் கூடிப் பேசி ஒருவழியாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு சார்க் அமைப்பில் விழுந்த ஓட்டையை தற்காலிகமாக அடைத்திருக்கின்றனர். காத்மாண்டுவில் சார்க் அமைப்பில் விழுந்த ஓட்டையின் வழியே சீனா எப்படியும் நுழையத்தான் முயற்சிக்கும்..

அதே நேரத்தில் ஓட்டையை எப்படி ஒழுங்காக மிகச் சரியாக அடைப்பது என்ற பெரும் வியூகமும் போராட்டமும் இந்தியாவுக்கு குறிப்பாக பிரதமர் மோடிக்கு நாளாந்த குடைச்சலாகவே இருக்கும்... இதன் முடிவில்தான் இருக்கிறது தெற்காசியாவின் பெரியண்ணன் யார் என்கிற மகுடம்!!

இப்போது நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் "சார்க் மாநாடு சாதனையா? சோதனையா"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+