காப்பாத்துங்க சார்.. ஈரோடு ரயிலில்.. கொத்து கொத்தாக முன்பதிவு பெட்டியில் ஏறிய வடஇந்தியர்கள்.. பரபர
தான் புக் செய்த சீட் கிடைக்காத பயணி ஒருவர் ரயிலில் நின்றபடி அதை வீடியோ எடுத்து புகார் செய்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு ரயிலில் முன்பதிவு பெட்டியில் டிக்கெட் புக் செய்யாமல் வடஇந்தியர்கள் கும்பல் கும்பலாக ஏறியது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வடஇந்தியர்கள் வருகை அதிகரித்து வருகிறது. வடஇந்தியாவில் போதிய வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டிற்கு பலர் வேலைக்கு வர தொடங்கி உள்ளனர்.
இதையடுத்து குற்றச்செயல்களில் வடஇந்தியர்கள் கைதாகும் சம்பவங்களும் நடக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் வடஇந்தியர்கள் கைதாகும் சம்பவங்கள் நடக்க தொடங்கி உள்ளன.

விவாதம்
வடஇந்தியர்கள் வருகை தவறு. அவர்கள் தமிழ்நாடு வந்து தமிழர்களின் வேலைகளை பறிக்கிறார்கள். குறைந்த கூலிக்கு வேலை பார்த்து தமிழர்களின் வேலைகளை பறிக்கிறார்கள். அதே சமயம் நமது கலாச்சாரத்தை மாற்றுகிறார்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் அவர்களை அனுமதிக்க கூடாது. நமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என்று ஒரு பக்கம் வாதம் வைக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் நாம் பிற மாநிலங்களுக்கு செல்லும் நிலையில் பிற மாநில மக்கள் நம் ஊருக்கு வந்தால் என்ன தப்பு? என்ற வாதமும் வைக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்ன தமிழ் சமூகம் இப்படி பேசுவது சரியா.. வந்தாரை வாழ மாநிலத்தில் இப்படி கருத்துக்கள் வைக்கப்படலாமா என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.

ரயில்
அதே சமயம் வடஇந்தியர்கள் சிலர் குற்றச்செயல்களில் ஈடுபவது, டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. முக்கியமாக தமிழ்நாட்டில் இருந்து வடஇந்தியாவிற்கு செல்லும் ரயில்களில் வடஇந்தியர்கள் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் போக்கு அதிகரித்து உள்ளது. சமீபத்தில் கூட பெங்களூருவில் இருந்து அசாம் செல்லக்கூடிய ரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளை ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அட்டகாசம் செய்ததால் தமிழ்நாடு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் டிக்கெட் இல்லாத வடமாநில இளைஞர்கள் அனைவரையும் ரயில்வே போலீசார் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டனர்.

ஈரோடு
இதே போன்ற சம்பவம் ஈரோட்டிலும் நடந்து உள்ளது. எர்ணாகுளம் முதல் பாட்னா வரை செல்லும் ரயிலில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்த ரயில் ஈரோடு வந்த போது கொங்கு மண்டலத்தில் வேலை பார்க்கும் பல பயணிகள் சட்டென ரயிலில் ஏறி உள்ளனர். இவர்கள் எல்லாம் ஹோலி பண்டிகைக்காக வீட்டிற்கு செல்பவர்கள். ஈரோடு ரயில் நிலையத்தில் டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் இவர்கள் ஏறி உள்ளனர். மொத்தம் 5 பெட்டிகளில் 100 கணக்கில் பயணிகள் ஏறி உள்ளனர். நூற்றுக்கணக்கில் ஏறி உள்ளே இருக்கும் பயணிகளுக்கும் தொல்லை கொடுத்து உள்ளனர்.

வீடியோ
தான் புக் செய்த சீட் கிடைக்காத பயணி ஒருவர் ரயிலில் நின்றபடி அதை வீடியோ எடுத்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தெற்கு ரயில்வேக்கு டேக் செய்துள்ளார். எங்களை காப்பாற்றுங்கள்.. நாங்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவில்லை என்று இவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து உடனே ரயில்வே போலீசார் அந்த ரயிலில் களமிறக்கப்பட்டு விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை அந்த வடஇந்திய பயணிகள் ரயிலில் இருந்து வெளியேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முன்பதிவு பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த பகுதிகளில் பரிசோதகர்கள் டிக்கெட் பரிசோதனை செய்ய வருவதில்லை என்றும் புகார் வைக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications