அதிமுககாரங்களுக்கே பதவி கொடுத்தா நாங்க என்ன பண்றது?ஒன்றிய செயலாளர் பதவியை உதறிய உ.பி.! திமுக பரபர.!
ஈரோடு: அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற பலர் தற்போது மாவட்ட செயலாளராகவும் அமைச்சர்களாகவும் பதவி வகித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலத்திற்கு திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பெருந்துறை ஒன்றிய செயலாளர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு பதவி கொடுத்தால் திமுகவில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் என கேள்வி எழுப்பி இருக்கிறார் ராஜினாமா செய்த ஒன்றிய செயலாளரான கே.பி.சாமி.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஆளும் கட்சியான திமுக தற்போதிலிருந்தே தயாராகி வருகிறது. இதனையடுத்து கட்சியிலும் ஆட்சியிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஐபிஎஸ் அதிகாரிகள் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் நான்காவது முறையாக அமைச்சரவையில் மாற்றம் நடந்திருக்கிறது.

மேலும் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்களும் ஏற்கனவே இந்த மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றனர். அந்த வகையில் தான் ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாஜலத்திற்கு திமுகவில் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை அதிமுகவில் இருந்த அவர் அதற்கு பிறகு திமுகவில் இணைந்தார். இதை அடுத்து தற்போது ஈரோடு மத்திய மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இதற்கு திமுகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெருந்துறை ஒன்றிய செயலாளரான கே.பி.சாமி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலத்திற்கு எதிராக பல ஆண்டுகளாக திமுகவினர் அரசியல் செய்து வந்த நிலையில் கட்சியில் தற்போது அவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாகத்தான் கே.பி. சாமி ராஜினாமா செய்து கட்சிக்கு தலைமைக்கு கடிதம் அளித்திருக்கிறார். அதே நேரத்தில் தொடர்ந்து பலரும் தோப்பு வெங்கடாசலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது.
தோப்பு வெங்கடாசலம்: தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் பிரபலமான நபராக இருந்தவர். 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில் வென்ற அவர் 2012 முதல் 2016 வரை அமைச்சராகவும், ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளராக 8 ஆண்டுகள் பதவி வகித்தவர். கடந்த தேர்தலில் அதிமுகவில் சீட்டு வழங்கப்படாததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெறும் பத்தாயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றார். தொடர்ந்து 2021 இல் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து மக்களவைத் தேர்தல் ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்காக தீவிர தேர்தல் பணியாற்றினார். தொடர்ந்து தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஈரோடு மத்திய மாவட்டத்திற்கு அவர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று இருக்கிறார்.
1977இல் இருந்து 2021 வரை 12 தேர்தல் நடைபெற்றாலும் பெருந்துறையில் ஒரு முறை கூட திமுக வென்றதில்லை. 2001 முதல் தற்போது வரை அதிமுக தான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தோப்பு வெங்கடாசலத்தின் வரவு திமுகவை பலமிக்கதாக மாற்றும் என்கின்றனர் திமுகவினர். ஆனால் அடிமட்ட தொண்டர்கள் அதனை ரசிக்கவில்லை. பொதுவாக திமுகவில் இருந்து அதிமுகவுக்கு பெரிய அளவில் யாரும் சென்றதில்லை. சென்றாலும் பதவி பெற்றதில்லை.
ஆனால் அதிமுகவிலிருந்து சென்றவர்களுக்கு திமுகவில் உரிய மரியாதையும் பதவியும் அளிக்கப்படுகிறது. திமுகவின் முக்கிய அமைச்சர்கள் பலரும் ஏற்கனவே அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், எவ வேலு, ரகுபதி, ஈரோடு முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், செந்தில் பாலாஜி, சேகர் பாபு, தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் என சிலர் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவருமே அதிமுகவில் இருந்து சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பட்டியலில் தோப்பு வெங்கடாசலமும் இணைந்திருப்பது தான் திமுகவினரின் கோபத்துக்கு காரணம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications