"இப்போது விஜய்.. அடுத்து அஜித்தும் கட்சி தொடங்குவார் பாருங்க.." அடித்து சொல்லும் ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு: நடிகர் விஜய் ஏற்கனவே தனியாக அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில், அடுத்து விரைவில் நடிகர் அஜித்தும் அரசியல் கட்சியைத் தொடங்குவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே திமுக- காங்கிரஸ் ஒரே கூட்டணியில் இணைந்து பயணித்து வருகிறது. இதற்கிடையே அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் பேசிய சில கருத்துகள் விவாதத்தைக் கிளப்பி இருந்தது.

செல்வப்பெருந்தகை பேச்சு: அதாவது மாநிலத்தில் காங்கிரஸை வலுப்படுத்த வேண்டும் என்றும் இன்னும் எத்தனை காலம் தான் காங்கிரஸ் மற்றவர்களையே சார்ந்திருக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அப்போதே செல்வப்பெருந்தகைக்கு பதிலளிக்கும் விதமாகப் பேசியிருந்தார்.
இதற்கிடையே ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெரும் என்ற அவர், எதிர்த்துப் போட்டியிடும் எல்லா கட்சிகளும் டெபாசிட் இழக்கும் என்றார். மேலும், காங்கிரஸ் தலைவர்கள் திமுக வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழிசை VS அண்ணாமலை! செல்வப்பெருந்தகை VS ஈவிகேஎஸ் இளங்கோவன்! கலவரத்தில் கட்சிகள்!
ஈவிகேஎஸ் இளங்கோவன்: அவர் மேலும் பேசுகையில், "திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. அதில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. எனது கருத்தும் காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கருத்தும் முரணாக இருப்பதாகக் கேட்கிறீர்கள்.. இது தொடர்பாக நான் தொடங்கி அனைவரும் விளக்கம் தந்துவிட்டோம். செல்வப்பெருந்தகை அவரது பேச்சுக்கு விளக்கம் கொடுத்துவிட்டார். இத்துடன் இந்த விவகாரம் முடிந்துவிட்டது. ஜனநாயக அடிப்படையில் இயங்கும் கட்சிகளின் கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள் இருப்பது சகஜம்தான்.
இப்போது மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு ஒரு மைனாரிட்டி அரசு.. இந்த ஆட்சி நீண்ட காலம் நீட்டிக்காது. அடுத்த 5 மாதங்களில் இந்த பாஜக அரசு. மேலும், தமிழிசையிடம் அமித்ஷா நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது.. நான் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் இதை ஏற்க முடியாது. கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதைத் தனி அறையில் அழைத்துப் பேசி இருக்கலாம்.. தமிழிசையிடம் மேடையில் வைத்து அமித்ஷா நடந்து கொண்ட விதம் தவறு" என்றார்.
அஜித் கட்சி தொடங்குவார்: தொடர்ந்து விஜய் ஆரம்பித்துள்ள கட்சி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "தொடக்கத்தில் விஜய் கூட கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்றே பலரும் சொன்னார்கள்.. ஆனால், இப்போது அவர் தனியாகக் கட்சியை ஆரம்பித்துவிட்டார்.. இப்போது நான் சொல்கிறேன் நிச்சயம் அஜித்தும் விரைவில் ஆரம்பித்துவிடுவார். அதை நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் மக்கள் தொகையில் 25% உள்ள இஸ்லாமியர்களில் ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி தரவில்லை என்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், அப்படியிருக்கும் போது இதை அனைவருக்குமான அரசு எனக் கூற முடியாது என்றும் சாடினார். ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக வர வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்ற அவர் இந்த விவகாரத்தில் சில நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாநிலக் கட்சி அந்தஸ்து: நாம் தமிழர் மற்றும் விசிக கட்சிகளுக்கு மாநில அந்தஸ்து கிடைத்துள்ள நிலையில், இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "சீமான் சென்னையில் இருந்து நாம் தமிழர் கட்சியை வைத்துக் கொண்டு அரசியல் செய்வதைவிட மும்பை, கொல்கத்தா, டெல்லி போய் அரசியல் செய்யலாம். வெளிநாட்டில் கூட அரசியல் செய்யலாம்.. அப்போது தான் அது நாட்டுக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லது.
அதேநேரம் விசிக தமிழ்நாட்டுக்கு மிக மிக அவசியம்.. தமிழ்நாட்டில் திருமாவளவனுக்குத் தனியாகச் செல்வாக்கு இருக்கிறது. அவர் எங்களுடனேயே இணைந்து பயணிப்பார்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications