தமிழிசை VS அண்ணாமலை! செல்வப்பெருந்தகை VS ஈவிகேஎஸ் இளங்கோவன்! கலவரத்தில் கட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

இந்தப் பக்கம் தமிழிசை VS அண்ணாமலை சர்ச்சை. அந்தப் பக்கம் செல்வப்பெருந்தகை VS ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை. ஒரே சமயத்தில் இரண்டு தேசிய கட்சிகளின் நிலையும் தமிழ்நாட்டில் சிக்கலாகி இருக்கிறது.

தமிழக காங்கிரஸ் கட்சி 9 இடங்களை வென்ற பிறகு திமுகவுடனான உரசலுக்குத் தூபம் போட்டுள்ளார் செல்வப் பெருந்தகை. இவர் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டபோதே திமுகவுடன் லேசான உரசல் தொடங்கியது.

lok sabha election 2024 DMK alliance mk stalin

காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய செல்வப்பெருந்தகை, 'எத்தனை காலத்திற்குத்தான் ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்துக் கொண்டு நிற்பது?' என்று மறைமுகமாக திமுகவைத் தாக்கினார்.

அடுத்துப் பேச வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், 'இந்த வெற்றி முதல்வர் ஸ்டாலினால் கிடைத்த வெற்றி. ஆகவே, ஆசைப்படலாம். அது பேராசையாக அமைந்துவிடக் கூடாது. இறுதியில் ஒன்றுமில்லாமல் போய்விடுவோம்' என்று எச்சரித்தார்.

பொதுக்குழுவில் நடந்த சர்ச்சைகள்: அடுத்ததாகப் பேசிய பீட்டர் அல்போன்ஸ், "உள்ளாட்சித் தேர்தலில் எந்த இடங்களை எல்லாம் கேட்டுப் பெறப் போகிறோம் என்பதை இப்போதே அடையாளம் காண வேண்டிய பொறுப்பு மாநிலத் தலைவருக்கு உள்ளது. ஆகவே அந்தப் பட்டியலை இப்போதே தயார் செய்யுங்கள்" என்றவர் சமூக நீதி பற்றிப் பேச அது சர்ச்சையாக மாறியது.

இறுதியில் பேச வந்த காங் முன்னாள் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி, "இந்த மைக் முன்னால் எவ்வளவு முரண்பட்ட கருத்துகள். முதலில் நாம் ஒருமித்த கருத்துடன் பேச வேண்டும்" என்றார்.

இந்தப் பேச்சுக்கு எல்லாம் ஒருவழியாகப் பதிலளித்த செல்வப்பெருந்தகை, "ஈவிகேஎஸ் இளங்கோவன் எதையும் வெளிப்படையாகப் பேசுபவர். அவர் ஜெயலலிதாவை விமர்சித்துள்ளார். கருணாநிதியை விமர்சித்துள்ளார்.

பின்னர் அதை எல்லாம் ஆராய்ந்து மறுபரிசீலனை செய்துள்ளார். அவர் கருத்தைப் பேச அவரை நாம் அனுமதிக்க வேண்டும்" என்று தொனியில் பேசி முடித்தார்.

தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. அதற்குக் காரணம் திமுகதான். காங்கிரஸ் 10.67% வாக்குகளை இந்தத் தேர்தலில் பெற்றுள்ளதற்கு மிக முக்கிய காரணம் திமுகதான்.

அது மட்டுமல்ல; ஈரோடு கிழக்கு தொகுதியில் மகன் மறைவுக்குப் பிறகு களம் இறங்கிய ஈவிகேஎஸ் இளங்கோவன் மிகப்பெரிய அளவில் வெற்றிக்கனியைப் பறித்ததற்குக் காங்கிரஸ் தொண்டர்களோ, அல்லது மாநிலத் தலைமையோ, இன்னும் சொல்லப் போனால் தேசிய தலைமையோ அல்ல. அதற்கு முழு காரணம் ஸ்டாலின். அடுத்து செந்தில் பாலாஜி. கூடவே திமுக என்ற கட்சி.

அதைத்தான் தனது பேச்சில் இளங்கோவன் சுட்டிக்காட்டி இருந்தார். ஒரு காலத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த இளங்கோவன் முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியை மிக மோசமாக விமர்சித்தார். அப்போது திமுக கூடி அவருக்கு எதிராக தீர்மானமே போட்டது. அந்தளவுக்குச் சர்ச்சையாகி கூட்டணியில் விரிசல் விழுந்தது.

இன்று காலங்கள் மாறிவிட்டது, பல வருடங்கள் மறைந்துவிட்டன. அப்படியான நிலையில் இளங்கோவனே தனது வெற்றிக்கும் கட்சி வெற்றிக்கும் ஸ்டாலின் தான் காரணம் எனப் பேசி வருகிறார்.

யாத்திரையால் கட்சி வளருமா?: அதை எல்லாம் ஏற்காமல் செல்வப்பெருந்தகை கட்சியை வளர்ப்பதற்காக யாத்திரை நடத்தப் போகிறேன் என்கிறார். அண்ணாமலை யாத்திரை நடத்திய பிறகு அவர் கோவையில் வெற்றி பெற்றுவிட்டாரா? அல்லது பாஜக பல தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டதா? வழக்கமாக வெற்றி பெறும் கன்னியாகுமரி தொகுதியிலேயே பொன் ராதாகிருஷ்ணன் தோல்வியைத் தழுவியுள்ளார்.

lok sabha election 2024 DMK alliance mk stalin

இதே மாதிரியான ஒரு சர்ச்சை தமிழக பாஜகவிற்குள் தமிழிசைக்கும் அண்ணாமலைக்கு நடந்து வருகிறது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒரே விசயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அதாவது, 'தேர்தல் முடிந்ததும் பாருங்கள் பாஜக எத்தனை இடங்களை வெல்கிறது என்று. 'என் மண் என் மக்கள்' யாத்திரை மூலம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். மக்கள் தமிழ்நாட்டில் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

ஊழல்களுடன் கூட்டணி வைத்துப் போய் ஓட்டுக் கேட்டால் போடமாட்டார்கள். தைரியமாகத் தனித்து நில். உன்னை ஆதரிக்கிறேன் என்பதே மக்கள் மனநிலையாக உள்ளது' என்று வாய் வலிக்க வலிக்கப் பேசினார்.

ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பாஜக மேலிடம் கூட்டணியைவிட்டு வெளியேறிய அதிமுகவை மீண்டும் உள்ளே இழுப்பதற்கான முயற்சிகளை எடுத்தது. 'கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளன' என்று தமிழக தேர்தல் கூட்டணி பொறுப்புகளைக் கவனிக்க வந்த மேலிடப் பொறுப்பாளர் கூறினார்.

அதற்குப் பதிலளிக்க முன்வந்த அண்ணாமலை, 'கதவு மட்டுமல்ல; ஜன்னல்கள் கூட திறந்தே உள்ளன' என்றார்.

அது மட்டுமல்ல; போகும் இடம் எல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அதிமுகவை நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி பேசினார். 2026 பாஜக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்றும் சொன்னார்.

இதை எல்லாம் கேட்டுவந்த எடப்பாடி பழனிசாமி இறுதியாகக் கூட்டணியை விட்டு வெளியேறினார். அதன்பின்னர் அவர் அண்ணாமலை பற்றியோ அல்லது மோடி பற்றியோ அதிகம் விமர்சிக்கவில்லை.

இதற்கு மாறாக அண்ணாமலை பாஜக தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக வளர்ந்துவிட்டது. நாங்கள்தான் இப்போதைக்கு 2வது கட்சி என பல கருத்துகளை முன்வைத்தார்.

ஆனால் மக்களவைத் தேர்தலில் பாஜக 24 தொகுதிகளில் போட்டிப் போட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 11.24% வாக்குகளைத்தான் அந்தக் கட்சி பெற்றுள்ளது. மேலும் இதனுடன் கூட்டணி அமைத்த பாமக 10 இடங்களில் போட்டியிட்டு 4.31% மேல் பெற முடியவில்லை.

இந்நிலையில்தான் தேர்தல் முடிந்த பிறகு பாருங்கள் என்ன நடக்கிறது என்று என அண்ணாமலை பேசிய டயலாக் அவருக்கு எதிராகவே மாறியுள்ளது. இப்போது அவரை தலைமைப் பதவியிலிருந்து மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.

தமிழிசையா? அண்ணாமலையா?: அதற்கான முதற்கட்ட நகர்வாக அண்ணாமலை vs தமிழிசை செளந்தரராஜன் மோதல் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

இதுவரை தேசிய தலைமையிடம் அண்ணாமலையை மீறி கள யதார்த்தங்களை எடுத்துச் சொல்ல பாஜகவில் மூத்த தலைவர்கள் யாரும் இல்லாமல் இருந்தனர். தமிழிசை ரிட்டர்ன் அதை மாற்றியுள்ளது.

அவர் தேர்தல் முடிவுகள் பாஜகவை எப்படிப் பாதித்துள்ளன என்பதை வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளார். குறிப்பாக அவரது பேட்டியில் அவர், "அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்திருந்தால், 35 பேர் வெற்றி பெற்றிருப்பார்கள் என்று கள யதார்த்தம் சொல்கிறது. கூட்டணி என்பது ஒரு தேர்தல் வியூகம். அதை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டாம் என்பது என் கருத்து" என்று பேசி இருந்தார்.

கூட்டணி இல்லாமல் தனித்து நிற்கவேண்டும் என்ற கருத்தை பாஜக தேசிய தலைமையிடம் வலியுறுத்தியவர் அண்ணாமலை. அதைத்தான் மறைமுகமாகத் தமிழிசை மறுத்துள்ளார்.

மேலும் கட்சியின் நலனுக்காக அவர் முன்வைத்த கருத்துகளை அவரது கட்சியில் உள்ள வார் ரூம் ஆட்கள் மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவரை உருவக் கேலி செய்தும் படங்களை வெளியிட்டு வருகின்றன.

அதைப்பற்றி தமிழிசை பேசும் போது, "உட்கட்சிக்குள் வருகின்ற இதைப் போன்ற கருத்துகள் தவிர்க்கப்பட வேண்டியவை. நான் உட்கட்சி ஐடி விங்க் நிர்வாகிகளை எதிர்க்கிறேன்.

தலைவர்கள் யாராவது கருத்துச் சொன்னால் அவர்களை மோசமாகப் பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதை முன்னாள் மாநில தலைவர் என்ற வகையில் எச்சரிக்கிறேன்" என்று பதிலடி கொடுத்திருந்தார்.

இவரை வேறு மாநிலத்திற்கு ஆளுநராகப் போடுங்கள் என்று வார் ரூம் ஆட்கள் விமர்சித்தனர். அதற்குத் தமிழிசை, " நான் இங்கேதான் இருப்பேன்" என்று மறுத்துள்ளார்.

மேலும் அவர் மாநிலத் தலைவராக இல்லாத காலங்களில் மாநில பாஜக நிலை பற்றி கருத்துச் சொல்லும் போது அவர், "சமூக விரோத ரவுடிகள் போல இருப்பவர்களைக் கட்சிக்குள் விட மாட்டேன்.

ஆனால் இப்போது அப்படி கட்சியில் சிலர் சேர்க்கப்பட்டு உள்ளனர். நான் அதற்கெல்லாம் கட்டுப்பாடு விதித்தேன். கட்சியில் இப்போது ரவுடிகள் சமீப காலங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்றும் பேசி இருந்தார்.

பாஜக ரவுடிகளின் கூடாரமாக மாறி வருகிறது என ஏற்கெனவே திமுக ஐடி விங்க் விமர்சனம் செய்து வருகிறது. அதன் தலைவர்களும் கூறிவந்தனர். அதை இப்போது தமிழிசையே கூறியுள்ளது பிரச்சினை மேலும் பற்றி எரிய எரிபொருளாக மாறியுள்ளது.

மாநில அரசியலில் உங்களுக்குப் பொறுப்பு மீண்டும் வழங்கப்படுமா? எனச் செய்தியாளர்கள் தமிழிசையைக் கேட்டனர். அதற்கு, "என்னுடைய அரசியல் வாழ்க்கையில் எதையுமே நான் எதிர்பார்த்தது கிடையாது. சாதாரண தொண்டராகத் தொடர்கிறேன். வேட்பாளராக நின்றேன். எல்லா முடிவுகளையும் ஆண்டவனிடமும் ஆண்டு கொண்டிருப்பவர்களிடமும் விட்டு விடுகிறேன்.

நான் அதிமுகவும் பாஜகவும் சேர்ந்தால் கூட்டணிக் கணக்கு இப்படி அமைந்திருக்கும் எனச் சொன்னேன். அது வேறு மாதிரி திசை திரும்பி எங்கே போய்க் கொண்டுள்ளது.

எவ்வளவு விமர்சனம் வந்தாலும் எனது கருத்தை வலிமையாகச் சொல்வேன். ஏனென்றால் கட்சிக்காகத்தான் பேசுகிறேன்.

lok sabha election 2024 DMK alliance mk stalin

பாஜகவுடன் சேர்ந்தாலே தோல்வி உறுதி எனப் பேசிக்கொண்டிருந்தவர்கள், இப்போது சேர்ந்திருந்தால் இத்தனை தொகுதிகளை வென்றிருப்போம் என்று பேசியதை நான் கட்சித் தொண்டராக மகிழ்ச்சியடைகிறேன். ஏற்றுக் கொள்கிறேன். கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது மகிழ்ச்சி. ஆனால், ஒரு இடமும் கிடைக்கவில்லை என்பது கவலை" என்று நீட்டி முழங்கியுள்ளார்.

அண்ணாமலை நன்றாகச் செயல்படுகிறார். அவரது தலைமையில் இயங்குவேன் என அவர் சொல்லவில்லை.

நேரம் பார்த்து காத்திருந்த அதிமுக: இப்படி தமிழிசைக்கும் அண்ணாமலைக்குமான மோதல் அதிகரித்து வரும் நிலையில் வார் ரூம் ஆட்களை ஒரு மாநிலத் தலைவராக அண்ணாமலை அடக்கி வைக்கவில்லை என்று சில மூத்த நிர்வாகிகள் கவலையுடன் சொல்கிறார்கள்.

மேலும் யாருடைய ஒப்புதலையும் அண்ணாமலை பெறுவதில்லை. யாருடனும் கலந்தாலோசிப்பதும் இல்லை. இதனால் கட்சி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் புலம்புகிறார்கள்.

வார் ரூம் ஆட்களைக் கண்டிப்பதற்குப் பதிலாக அண்ணாமலை வேறு மாதிரி இந்தப் பிரச்சினையை டீல் செய்ய முடிவு செய்துள்ளார். "இனி விமான நிலையத்தில் எல்லாம் பிரஸ் மீட் கிடையாது. அனைத்து செய்தியாளர் சந்திப்பும் இனி பாஜக கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் நடைபெறும்" என்று அவர் கோவை விமானநிலையத்தில் பேசியுள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் வேலுமணி உள்ளிட்ட சில அதிமுக தலைவர்கள் பாஜக கூட்டணி இழப்பை உணர்ந்து பேசி வருகிறார்கள். அவர்களை அரவணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கான வேலைகளைச் செய்யாமல் அண்ணாமலை, "இதுவரை என்ன சொன்னார்கள். பாஜகவின் நிர்ப்பந்தத்தால்தான் சில திட்டங்களை ஆதரித்தோம். ஆகவேதான் நாங்கள் வெளியேறிவிட்டோம் என்றார்கள்.

இப்போது பாஜகவுடன் கூட்டணி இருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என்கிறார் வேலுமணி. இது ஏதோ எடப்பாடிக்கும் வேலுமணிக்குமான உட்கட்சி பிரச்சினை மாதிரி தெரிகிறது.

கூட்டணி பிரிந்த பிறகு வேறு காரணம் சொன்னார்கள், இந்தச் சமுதாயத்தின் வாக்குகள் கிடைக்கும். இத்தனை ஆண்டுகள் அந்த வாக்குகள் வரவில்லை, நாங்கள் தவறு செய்துவிட்டோம்.

நிர்ப்பந்திக்கப்பட்டு சில சட்டங்களுக்கு ஆதரவு கொடுத்தோம் எனச் சொன்னவர்கள், தேர்தல் முடிந்த பிறகு பாஜக எங்கள் கூட்டணியிலிருந்திருந்தால் 35 தொகுதிகளை வென்றிருப்போம் என்கிறார்கள்" என்று மீண்டும் வம்பு சண்டைக்கு நிற்கிறார்.

இந்த மாதிரியான அவரது அப்ரோச் தான் கட்சியின் பின்னடைவுக்குக் காரணம் என்று மூத்த தலைவர்கள் தேசிய மேலிடத்திற்கு ரிப்போர்ட் எழுத உள்ளதாகச் சொல்கிறார்கள்.

தேசிய பாஜக தலைவர் மாற்றத்திற்கான செய்தி வரும்போது தமிழக பாஜகவில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால் அதிமுக தரப்பும் அண்ணாமலை பற்றிய கசப்பான அனுபவங்களை பாஜக தலைமைக்குத் தெரியப்படுத்து வாய்ப்புகள் அதிகம்.

ஆக, இரண்டு பக்கமும் அண்ணாமலையை தலை மீது கத்தி தொங்கிக் கொண்டுள்ளது. கூடுதலாக அண்ணாமலைக்கு மீடியா பக்கமும் சரியான ஒத்துழைப்பு இல்லை. அங்கேயும் அவர் மோதல் போக்கைத்தான் கடைப்பிடித்து வருகிறார்.

தமிழிசை போல நெருக்கடியான தருணங்களில் இது வெற்றிகரமான தோல்வி என டயலாக் பேச அவருக்குத் தெரியவில்லை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+