ஈரோடு கிழக்கு: தப்பியது நாதக! மூன்றாமிடத்திற்கு முன்னேறிய நோட்டா! 2023 இல் என்ன ஆனது தெரியுமா?
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நோட்டாவுக்கு (யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை- None Of The Above- NOTA) 6109 பேர் வாக்களித்துள்ளனர். இந்த வாக்குகள் அதிமுக, தேமுதிக பாஜக உள்ளிட்ட கட்சியினருடையதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடந்தது. மொத்தம் 17 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 115709 வாக்குகளை பெற்று வென்றுள்ளார். அது போல் நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 24151 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியுள்ளார். இந்த தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்ளில் திமுக, நாதக தவிர மற்றவர்கள் சுயேச்சைகள், சிறிய கட்சியை சேர்ந்தவர்கள்.
இவர்கள் எல்லாம் 3 இலக்கம், 2 இலக்கம் என கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் நோட்டா 6,109 வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது கணக்குபடி நோட்டா மூன்றாமிடத்தை பிடித்துள்ளது.
இதற்கு காரணம் என்னவென ஆராய்ந்த போது, அரசியல் பார்வையாளர்கள் சொல்வது என்னவெனில், " களத்தில் அதிமுக இருந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும். மேலும் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கே தொகுதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை திமுக தட்டி பறித்ததாக அப்பகுதி காங்கிரஸ் தொண்டர்கள் கருதுகிறார்கள்.
எனவே இந்த தொகுதியை பறித்த கோபத்தில் கூட அவர்களின் வாக்குகள் நோட்டாவுக்கோ அல்லது நாம் தமிழர் கட்சிக்கோ சென்றிருக்க வாய்ப்புள்ளது. அது போல் அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துவிட்டன. இதனால் ஈரோடு கிழக்கு உள்ள அந்த கட்சி வேட்பாளர்களுக்கு ஒன்று திமுக, நாதகவுக்கு வாக்களிக்க வேண்டும். இல்லாவிட்டால் மனசாட்சி உறுத்தினால் நோட்டாவுக்கு வாக்களிக்க முடியும்.

எனவே அவர்களின் வாக்குகளும் நோட்டாவுக்கு கிடைத்திருக்க வழி இருக்கிறது. மேலும் இந்த தேர்தலில் 72 ஆயிரம் பேர் வாக்களிக்க வரவில்லை என்கிறார்கள். எனவே அவர்களின் வாக்குகளும் இருந்திருந்தால் யாருக்கு போயிருக்கும் என்பது தெரியவில்லை. நோட்டாவுக்கு இத்தனை வாக்குகள் கிடைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
கடந்த தேர்தலை காட்டிலும் நோட்டாவுக்கு இந்த முறை அதிகமாக இருந்தாலும் கடந்த முறையும் இந்த முறை நோட்டாவை விட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications