ஊர் மெச்சிய தாய் மாமன் சீர்... 100 கார்கள், 15 மாட்டுவண்டிகளில்.. அசத்தல்.. வைரலாகும் வீடியோ!
ஈரோடு: என்னதான் காலமாற்றம் கரைபுரண்டு ஓடினாலும், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு சீர் கொடுக்கும் நடைமுறை இன்னமும் மாறவில்லை. அந்த வகையில் ஈரோடு அருகே தனது தங்கை மகளுக்கு மருத்துவர் ராஜா என்பவர் கொடுத்த சீர் பற்றி இப்போது மொத்த தமிழகமும் பேசிக் கொண்டு இருக்கிறது.
Recommended Video
கோபிசெட்டிபாளையத்தில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார் மருத்துவர் ராஜா. இவரின் ஒரே தங்கை மோகனப்பிரியா. தனது மகள்கள் இருவருக்கும் ஒரே நாளில் சடங்கு செய்யத் திட்டமிட்டு அதற்கான அழைப்பை அண்ணன் குடும்பத்திற்கு முறைப்படி வைத்தார் மோகனப் பிரியா.
தனது தங்கை மீதும், அவர் குடும்பம் மீதும் மிகுந்த அன்பு கொண்ட ராஜா, தனது தங்கை மகள்களுக்கு பிரம்மாண்டமாக சீர் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

100 கார்கள்
எனவே, மொத்தம் நூறு கார்களிலும், 15 மாட்டு வண்டிகளிலும், சீர்வரிசை பொருட்களை ஏற்றிக் கொண்டு தங்கை வீட்டுக்கு கிளம்பியுள்ளார். முதல் மாட்டு வண்டியை ராஜாவே ஓட்டி வந்தார்.

தாய் மாமன் சீர்
இவர் முன்னே செல்ல.. உறவினர்கள் குதிரைகளிலும் கார்களிலும் அணிவகுத்தனர். "தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி.. அவன் தங்க கொலுசு பண்ணித் தாராண்டி.." என்ற கிழக்கு சீமையிலேயே படப் பாடல் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

பித்தளை சாப்பாடு
இந்த பிரமாண்ட சீர்வரிசை ஊர்வலத்தை ஊரே வியந்து பார்த்தது. சடங்கு நிகழ்ச்சியின்போது, பித்தளை பாத்திரங்களில் உணவு சமைத்து வழங்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி அனைத்து நிகழ்ச்சிகளும் நடந்தன.

ராஜா ராஜாதான்
தாய்மாமா, அத்தை காலில் விழுந்து ஆசி பெற்றனர், அந்த இளம் பெண்கள். எல்லாம் மகிழ்ச்சியாக நடந்தேறியது. நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக இப்படி ஒரு சீர்வரிசை செய்தேன். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று ரொம்பவே நிதானமாக பேசிவிட்டு விடை பெற்றுக் கொண்டார் தாய் மாமன் ராஜா. பெயரில் மட்டுமல்ல, மனதளவிலும் இவர் ராஜாதான்!












Click it and Unblock the Notifications