நள்ளிரவில் பைக்கில் தொலைதூர பயணம்.. ஈரோட்டில் கண் முன்னே இறந்த மனைவி, குழந்தை.. கதறிய கணவன்
ஈரோடு: ஈரோடு அருகே உள்ள சித்தோடு செல்லப்பம்பாளையம் பிரிவில் திருப்பூரைச் சேர்ந்த கணவன், மனைவி குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, கணவர் கண் முன்னே 6 மாத குழந்தையுடன் பெண் பலியாகி உள்ளார்.
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி அருகே எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் 30 வயதாகும் மணிவண்ணன், இவர் அந்த பகுதியில் தையல் கடை வைத்துள்ளார். இருடைய மனைவி சுபாஷினி (24). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 6 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.

கள்ளக்குறிச்சியில் சுபாஷினியின் தாய் வீடு உள்ளது. அங்குள்ள ஓம்சக்தி கோவிலில் மாலை அணிந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் மணிவண்ணன் மனைவி, மகன், கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டார். இவர்களது வாகனத்தில் ஈரோடு அருகே உள்ள சித்தோடு செல்லப்பம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் அதிகாலை 4 மணி அளவில் அவர்கள் சென்றனர்.
அப்போது பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் திடீரென இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மணிவண்ணன், அவருடைய மகன் இருவரும் இடதுபுறமாக ரோட்டில் விழுந்தார்கள். வலதுபுறமாக சுபாஷினியும், அவருடைய கையில் வைத்திருந்த 6 மாத குழந்தையும் விழுந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தின் மீது மோதிய வாகனத்தின் சக்கரம் சுபாஷினியின் மீது ஏறி இறங்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். ரோட்டில் விழுந்த குழந்தையும் பரிதாபமாக இறந்தது. தன் கண் முன்னே சில நொடிகளில் மனைவியும் குழந்தையும் இறந்த சம்பவத்தை பார்த்து மணிவண்ணன் கதறி அழுதார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. சத்தம் கேட்டு அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து தொழிலாளர்கள் ஓடிவந்தார்கள். சாலையில் படுகாயத்துடன் கிடந்த மணிவண்ணனையும், அவருைடய மகனையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சுபாஷினி மற்றும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைககு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்று தீவிரமாக விசாரிக்கிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இரவில் அல்லது அதிகாலையில் நீண்ட தூரம் இருசக்கர வாகனத்தில் பயணிப்பது ஆபத்தானது. ஏனெனில் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்லும். எனவே இருசக்கர வாகனத்தில் செல்வோர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் பல மணி நேரம் செல்வது சிக்கலை ஏற்படுத்தும். தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை தள்ளிவிடுவது, மோதிவிட்டு நிற்காமல் செல்வது அடிக்கடி நடக்கிறது. எனவே தயவு செய்து இரவில் சாலைகளில் நீண்ட பயணத்தை தவிருங்கள்.












Click it and Unblock the Notifications