பண்ணாரி கோயிலில் விநாயகரை வணங்கிச் சென்ற காட்டு யானை! ஆச்சரியமாக பார்த்த ஈரோடு சத்தியமங்கலம் மக்கள்
ஈரோடு: ஈரோடு சத்தியமங்கலம் தாளவாடி பகுதிகளில் தினமும் இரவு நேரத்தில் காட்டு யானைகள் விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதால் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பண்ணாரி சாலையில் ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.. இந்த காட்டில் இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.
தமிழக - கர்நாடகா எல்லை
தமிழக - கர்நாடகா இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த திம்பம் மலைப்பாதை திகழ்ந்து வருகிறது. இந்த பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். ஆனால், இரவு நேரங்களில் இந்த பாதைகளில் யானை, புலி, சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் நடமாடுவதும் வழக்கமாகிவிட்டது..
சிலசமயம் தண்ணீர் தேடி இரவு நேரத்தில் சாலையை கடக்கும்போது, இந்த விலங்குகள் அவ்வப்போது வாகனங்களில் அடிபட்டு, இறந்துபோகும் பரிதாபங்களும் நடக்கின்றன. அதேபோல சாலையோர தடுப்பு சுவரில், இரவு நேரத்தில் சிறுத்தைகள்கூட உட்கார்ந்து விட்டு போகும்.
யானைகள் அட்டகாசம்
அதனால்தான், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும், குறிப்பாக வாகனங்களை நிறுத்தி இறங்குவது, வன விலங்குகளை அருகில் நின்று பார்ப்பது, போட்டோ எடுப்பது போன்ற ஆபத்தான காரியங்களை செய்யக்கூடாது என்றெல்லாம் வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்..
அதேபோல யானைகளும் அட்டகாசங்களும் இங்கு அதிகம்.. வனப்பகுதியிலிருந்து வெளியே வரும் யானைகள், அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வடுகின்றன. குறிப்பாக தாளவாடி பகுதியில் யானைகள் வந்து செல்வது அதிகமாகிவிட்டது,.
இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலைமைக்கு ஆளாகிறார்கள். இன்றைய தினம்கூட, தாளவாடி மலைப்பகுதியில், கிராமத்தை ஒட்டிய தரிசு நிலங்களில் பட்டப்பகலில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டதால் மலைகிராம மக்கள் அச்சத்தில் உறைந்து கிடக்கிறார்களாம்.
விநாயகர் கோயிலில் யானை
இந்நிலையில், யானை வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. பண்ணாரி மாரியம்மன் கோவில் அடுத்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை அடிவாரத்தில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது..
நேற்று முன்தினம், அந்த வழியாக லாரி ஓட்டுனர் ஒருவர் சென்றிருக்கிறார்.. அங்கிருந்த விநாயகர் கோவிலை பார்த்ததுமே, லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு விநாயகருக்கு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தார்..
லாரி டிரைவர் ஆச்சரியம்
அந்த நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, காட்டு யானை ஒன்று விநாயகர் கோவிலை நோக்கி வந்துள்ளது.. இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர், என்ன செய்வதென்றே தெரியாமல் பீதியில் உறைந்தார்..
ஆனால் அந்த யானை யாரையும் தொந்தரவு செய்யாமல், நேராக விநாயகர் கோயில் முன்பு வந்து நின்றது.. விநாயகரை துதிக்கையை தூக்கி வணங்கியது... பிறகு வனப்பகுதிக்குள் சென்று மறைந்துவிட்டது...
இந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர்.. இந்த காட்சிதான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி, காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.












Click it and Unblock the Notifications