திமுக VS நாதக.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! 5 மணி வரை 64.02% ஓட்டுப்பதிவு!
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். ஒருசில இடங்களை தவிர எவ்வித பிரச்சனையும் இன்றி வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து கடந்த 2023ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் கடந்தாண்டு அவர் மறைவடைந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 2வது முறையாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒரே ஆட்சி காலத்தில் மூன்று முறை தேர்தல்களை சந்தித்தவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் என்ற புதிய சாதனை படைத்துள்ளனர்.
பிப்ரவரி 5ஆம் தேதியான இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ள நிலையில் திமுக முதல் ஆளாக தனது வேட்பாளரை அறிவித்தது. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அவரை எதிர்த்து தமிழகத்தின் ஒரே கட்சியாக நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என சீமான் அறிவித்ததோடு, சீதாலட்சுமியை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் மூன்று பேரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. எட்டு பேரின் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 47 பேர் களத்தில் இருந்த நிலையில், அதில் பத்மாவதி என்பவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வேட்பு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
தற்போது திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, தவிர நாடாளும் மக்கள் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், 33 சுயேச்சைகளும் களத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது.
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண் வாக்காளர்களும் 37 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள். மொத்தம் 237 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். 53 இடங்களில் 237 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு 850 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 308 விவிபேட் இயந்திரங்கள் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 237 வாக்குச்சாவடிகளில் 300 துணை ராணுவ வீரர்கள், 450 பட்டாலியன் போலீசார், 250 ஆயுதப்படை போலீசார், 1678 சட்டம் ஒழுங்கு போலீசார் என 2678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். தொடர்ந்து வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வந்த நிலையில் 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
5 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 64.02% வாக்குப்பதிவு நடந்துள்ளது. முழுமையான வாக்குப்பதிவு விவரம் சிறிது நேரத்தில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications