கொடுமை.. கோலத்தால் அலங்கோலமான ஈரோடு கிழக்கு.. கடும் மோதல்.. விரைந்த ராணுவம்!
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக பணிமனை முன்பு சாலையில் போடப்பட்ட இரட்டை இலை கோலத்தை திமுகவினர் அழித்தனர். இதனால் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு துணை ராணுவப்படையினர்
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் களத்தில் நேற்று திமுகவினர், நாம் தமிழர் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை கோலத்தால் அதிமுக, திமுகவினர் மோதிக்கொண்டனர். இது பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் துணை ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சி திருமகன் ஈவெரா கடந்த மாதம் காலமானார். வரும் 27ம் தேதிக்கு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்பட பிற கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் களமிறங்கி உள்ளனர். மொத்தமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

காங்கிரசுக்கு ஆதரவு பிரசாரம்
இந்த வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தற்போது தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எம்பி, எம்எல்ஏக்கள், நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக சார்பில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளூர் நிர்வாகிகள் ஓட்டு சேகரிக்கின்றனர். இன்னும் முதல்வர் முக ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளனர்.

அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் பிரசாரம்
தேமுதிக சார்பில் வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவாக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன் விஜய பிரபாகரன், பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ், நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவை ஆதரித்து சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அதிமுக சார்பில் அக்கட்சியின் வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி பிரசாரம் செய்தார். மேலம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணி செய்து வருகின்றனர். இதனால் ஈரோடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தேர்தல் பணிமனைகள்
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈரோட்டில் பல இடங்களில் திமுக, அதிமுக, காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. இதில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட பணிமனைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ராமமூர்த்தி நகரில் திமுக தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை கோலத்தால் மோதல்
இந்த பணிமனையில் இருந்து திமுகவினர் தேர்தல் பிரசார வியூகங்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் ராமமூர்த்தி நகர் திமுக தேர்தல் பணிமனை முன்பு உள்ள சாலையில் அதிமுகவின் சாலையில் இரட்டை இலை சின்னத்தை கோலமாக போட்டுள்ளனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இரட்டை இலை கோலத்தை திமுகவினர் தண்ணீர் ஊற்றி அழித்தனர். இதனால் இருகட்சியினர் இடையே திடீரென்று வாக்குவாதம் உருவாகி மோதல் ஏற்பட்டது.

துணை ராணுவம் குவிப்பு
இதையடுத்து உடனடியாக போலீசார் வந்தனர். இருகட்சியினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக துணை ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் ஈரோடு ராமமூர்த்தி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக நேற்று ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியின் மண்டை உடைக்கப்பட்டது. இந்நிலையில் 2வது நாளாக இன்றும் ஈரோடு கிழக்கில் அரசியல் கட்சியினர் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications