பெரியார் பிறந்த மண் ஈரோடு..திமுகவின் அடித்தளமே ஈரோடுதான்..முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். மகன் இறந்ததால் தந்தை வேட்பாளராகும் நிலை ஈரோடு கிழக்குத் தொகுதியில் உருவாகியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் வேதனையுடன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து சம்பத் நகர், பெரிய வலசு, சக்தி ரோடு, மஜித் வீதி, காந்திசிலை ஆகிய இடங்களில் முதலமைச்சர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவேரா திடீரென்று அகால மரணமடைந்து விட்டார். இந்த தொகுதியில் உள்ள மக்கள் எல்லாம் வேதனையடைந்தனர். இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடக்கிறது.
தந்தை இழந்து அந்த இடத்தை நிரப்ப மகன் வருவார். மகன் இறந்து அந்த இடத்தை பூர்த்தி செய்ய ஈவிகேஎஸ் இளங்கோவன் வந்திருக்கிறார். மாபெரும் வெற்றியைத் தரவேண்டும்.
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள், உறுதிமொழிகளை நிறைவேற்றி தருவோம் என்று வாக்களித்தீர்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்று மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளது.
ஆதாரங்களுடன் திமுக செய்த சாதனைகளை பட்டியலிடுகிறேன். காலை உணவுத்திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சில ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்தப்படுகிறது. கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் மூலம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. கோரிக்கைகள் வைக்காமலேயே இலவச மின்சார திட்டம் அறிவிக்கப்பட்டது. திமுகவின் சாதனைப்பட்டியல் மிக நீண்டது. உலக அளவில் செஸ் வீரர்கள் பெருமைப்படும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டது.
என் உயிரோடு கலந்தது ஈரோடு. திமுகவின் அடித்தளமே ஈரோடுதான் என்று குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் உள்ள அனைவருமே முதல்வராக வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம், அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டது. மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. புதிய ஐடி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்று திமுக ஆட்சியின் சாதனைகளை முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டார்.












Click it and Unblock the Notifications