ஓய்ந்த பிரசாரம்.. ஈரோடு கிழக்கில் நாளை வாக்குப்பதிவு.. தொகுதி சுவாரசியங்கள் இதுதான்! முழுவிபரம்
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்பட பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் என்ன நடந்தது? அந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2021ல் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி திமுகவில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல் அதிமுகவில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவரொ வெற்றி பெற்று எம்எல்ஏவானார். இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். இந்நிலையில் தான் திருமகன் ஈவெரா கடந்த மாதம் காலமானர்.

களத்தில் 77 பேர்
இதையடுத்து பிப்ரவரி 27 ம் தேதி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுகவில் தென்னரசு, தேமுதிகவில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியில் மேனகா உள்பட மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.

ஓய்ந்துபோன பிரசாரம்
இந்த தேர்தல் என்பது ஆளும் திமுகவுக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பெண்ணாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் களத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இருந்தாலும் அவருக்காக திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் வீதிவீதியாக பிரசாரம் செய்ய தொடங்கினர். மேலும் நேற்று முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் பிரசாரம் செய்தனர். தேமுதிக ஆனந்துக்கு ஆதரவாக விஜயகாந்த் மனைவி பிரேமலாதா, அவரது சகோதரர் சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோரும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.

ரத்தாகும் என பரவிய தகவல்
இந்த பிரசாரத்தின்போது சில அரசியல் கட்சிகள் மக்களுக்கு லஞ்சமாக பணம், பிரியாணி, வெள்ளி கொலுசு, குக்கர் உள்ளிட்ட பலவற்றை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பான வீடியோக்களும் இணையதளத்தில் வெளியான நிலையில் 100க்கும் அதிகமான புகார்கள் சென்றன. இதனால் இடைத்தேர்தல் நிறுத்தப்படும் என்ற தகவலும் பரவியது. ஆனால் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்யவில்லை. இதனால் குறித்த தேதியில் நாளை இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

2.27 லட்சம் வாக்காளர்கள்
நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில் தொகுதியை சாராத வெளிநபர்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். இதையடுத்து அங்கு தேர்தல் ஏற்பாடுகள் தயாராக உள்ளன. மக்கள் வாக்களிக்கும் வகையில் 238 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கில் பிப்ரவரி 7ம் தேதி நிலவரப்படி மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 பேர் ஆண்களாகவும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர் பெண்களாகவும் உள்ளனர். இதன்மூலம் தொகுதியில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு
நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபற உள்ளது. மாலை 6 மணி வரை மக்கள் ஓட்டு போடலாம். மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடியில் இருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் காத்திருந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு மையத்துக்கு 5 இயந்திரம்
மேலும் தற்போது மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் ஒரு வாக்குச்சாவடிக்கு மொத்தம் 5 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதன்படி பார்த்தால் 1190 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டில் இருக்கும். மேலும் அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடுகளுக்கு தேவையான இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

துணை ராணுவ பாதுகாப்பு
அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 34 மையங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக களமிறக்கப்பட உள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படுவதாக கூறப்படுகிறது. முன்னதாக பிரசாரத்தின்போது திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்கள் ஏற்பட்டு நிர்வாகிகளின் மண்டைகள் உடைக்கப்பட்டன. இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் முனைப்பில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரிசல்ட் எப்போது?
நாளை ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு மார்ச் 2ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 2ம் தேதி மதியம் 3 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவு என்பது தெரிந்துவிடும்.

ரூ.62 லட்சம் பொருட்கள் பறிமுதல்
மேலும் ஈரோடு கிழக்கில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி கடந்த மாதம் 20ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.51 லட்சத்து 31 ஆயிரத்து 590 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.9.57 லட்சம் மதிப்பில் 1,323 லிட்டர் மதுபானங்கள், ரூ.1.33 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் ரூ.62 லட்சத்து 22 ஆயிரத்து 292 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications