கரூர் சம்பவத்திற்கு பின் முதல் கூட்டம்! ஈரோடுக்கு 11 மணிக்கு வந்தடைந்தார் விஜய்
ஈரோடு: ஈரோடு விஜயமங்கலத்தில் இன்று தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டம் தொடங்கியுள்ளது. பொதுக்கூட்டம் 11 மணிக்கு தொடங்கும் எனக் கூறப்பட்ட நிலையில், 11.20 மணிக்குள் விஜய் வந்தார். அதிகாலையிலிருந்தே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தவெக தொண்டர்கள் வருகை தந்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகத்தில் பொதுவெளியில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியாக ஈரோடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் அமைக்கப்பட்டது.

2 மணி நேரம் மட்டுமே அனுமதி
60 ஏக்கரில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங், 20 ஏக்கரில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தம் என வாகன நிறுத்தம் தயார் செய்யப்பட்டது. இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்க வருபவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உணவு வழங்கும் திட்டம் இல்லை என்று செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இதர அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். விஜய் பிரசார வாகனத்தில் நின்றபடியே பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த விஜய் தொடர்ந்து அங்கிருந்து காரில் ஈரோடு பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தார்.
இன்று காலை 8 மணியளவில் விஜய் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். சென்னை விமான நிலையத்திற்கு 8.50 மணியளவில் வந்த விஜய் அங்கிருந்து கோவை விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் ஈரோடு பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தடைந்துள்ளார். தொடர்ந்து கூட்டம் தொடங்கியுள்ளது.
60 சிசிடிவி கேமராக்கள்
தவெக பொதுக்கூட்டத்திற்காக சுமார் 1,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுக்கூட்ட மைதானத்தில் 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மைதானத்தைச் சுற்றிலும் தொட்டிகள் வைக்கப்பட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. டேங்கர் லாரிகளில் குடிநீர் பிடித்து குடிப்பதற்கேற்ற வகையில் வசதிகள் செய்யப்பட்டு, ஆங்காங்கே டேங்கர் லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
குவியும் தொண்டர்கள்
நடமாடும் குடிநீர் விநியோக வசதியும் உள்ளது. பொதுமக்கள், தொண்டர்கள் நின்று கட்சித் தலைவர் விஜய்யை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளுக்குள் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக குடிநீர் தொட்டி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே விஜயமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 8 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
விஜய்யை முன் வரிசையில் இருந்து பார்க்க வேண்டும் என்பதற்காக முண்டியடித்துக்கொண்டே சென்றனர். போலீசாரும் உள்ளே அவர்களை அனுமதித்தனர். வெளியூர்களிலிருந்து நூற்றுக்கணக்கான தவெகவினர் வருகை தருவதை பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications