துரைமுருகன் என் நண்பர் தான்.. 2 பேரும் எம்ஜிஆர் வீட்டில் என்ன செய்தோம் தெரியுமா? பொன்னையன் ‛பளீச்’
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தீவிர பிரசாரம் செய்தார்
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அமைச்சர் துரை முருகன் தெரிவித்து இருந்தார். இதற்கு தற்போது பொன்னையன் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் துரை முருகனும், அவரும் எம்ஜிஆர் வீட்டில் செய்த சம்பவத்தை நினைவுக்கூறி நட்பு பராட்டவும் செய்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த மாதம் காலமான நிலையில் அந்த தொகுதிக்கு வரும் 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தலைவர்கள் பிரசாரம்
2021 சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் நடக்கும் முதல் இடைத்தேர்தல் இது என்பதால் பலத்தை நிரூபிக்க திமுக, காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக கட்சி தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் முதல்வர் முக ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளனர்.

துரைமுருகன் சொன்னது என்ன?
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி வீதிவீதியாக திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் அமைச்சர் துரைமுருகன் அதிமுகவை விமர்சனம் செய்திருந்தார். அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது. இதனால் ஆளும் அரசை எதிர்க்கட்சியினர் ஒருபோதும் பாராட்டமாட்டார்கள். ஈரோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 70 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறியிருந்தார்.

பொன்னையனிடம் கேள்வி
இதுபற்றி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு துரைமுருகனுக்கும், அவருக்கும் இடையேயான பந்தத்தை நினைவுக்கூறி விமர்சனம் செய்தார். இதுபற்றி பொன்னையன் கூறியதாவது:

எம்ஜிஆர் வீட்டில் நடந்தது என்ன?
துரைமுருகன் எனது நெருங்கிய நண்பர். புரட்சி தலைவர் எம்ஜிஆர் வீட்டில் நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம். ஒன்றாக சாப்பிட்டுள்ளோம். சில நேரங்களில் அவர்கள் உண்மையான களப்பணியை அறியாமல் பேசுகின்றனர். அதனை நாம் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. துரைமுருகன் திமுகவில் இருந்தாலும் கூட எங்களுக்கும் நண்பராக தான் இருக்கிறார்'' என்றார்.












Click it and Unblock the Notifications