‛நான் தான் கடவுள்’..ஈரோட்டில் சாமி சிலை மீது ஏறி அமர்ந்த ‛கோசலராமன்’..அர்ச்சகர்கள் பூஜை - பரபரப்பு
ஈரோடு: ஈரோட்டில் தன்னை கடவுள் என்று கூறி அர்ச்சகர்களை வைத்து தனக்கு தானே பூஜைகளை செய்துக்கொண்டு வரும் நபர் குறித்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த உலகில் கடவுள் குறித்து ஏராளமான புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சாந்தமாகவும், ஆக்ரோசமாகவும், விநோதமாகவும், மனித உருவுக்கு அப்பாற்பட்டதாகவும் கடவுள்கள் குறித்த வரையறைகளை முன்னோர் விட்டு சென்றிருக்கின்றனர். இன்றைக்கும் கூட பேயை பார்த்ததாக சொன்னால் நம்பிவிடுவார்கள். ஆனால், கடவுளை பார்த்ததாக சொன்னால் நம்பவே மாட்டார்கள். இப்படி இருக்கையில் ஈரோட்டில் தன்னை கடவுள் என்று ஒருவர் கூறிக்கொண்டு தனக்கு தானே அர்ச்சகர்களை வைத்துக்கொண்டு பூஜை செய்துக்கொண்டுள்ள சம்பவம் விவாதங்களை கிளப்பியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் கிராமத்தில் கோசலராமன் என்பவர் வசித்து வருகிறார். தீவிர பெருமாள் பக்தரான இவர் சமீபத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் 'கலியுக ரங்கநாதர்' கோயிலை கட்டியிருக்கிறார். கோயில் கருவறையில் ரங்கநாதர் ஐந்து தலை நாகம் மீது துயில் கொண்டிருக்கிறார். இக்கோயிலுக்கு அக்கம் பக்கத்தை சேர்ந்த கிராமத்தினர் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இப்படி இருக்கையில் கடந்த அமாவாசை தினத்தன்று நடந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
அதாவது, அமாவாசையன்று வழக்கம்போல கலியுக ரங்கநாதருக்கு பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த 'கோசலராமன்' திடீரென ரங்கநாதர் சிலை மீது ஏறி அமர்ந்து நான்தான் கடவுள் என்று கூறிக்கொண்டார். சுவாமிக்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களும் கோசலராமனுக்கு பூஜைகளை செய்திருக்கின்றனர். பால் ஊற்றி, பொட்டு வைத்து தீபம் ஏற்றி ஆராதனை செய்ததை பார்த்த பக்தர்கள், இதனை வீடியோவாக பதிவு செய்து சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்துள்ளனர்.
தற்போது இந்த வீடியோ டிரெண்டாக தொடங்கியுள்ளது. ஏற்கெனவே தன்னை கடவுள் என்று இதற்கு முன்னர் பலபேர் கிளம்பியிருக்கின்றனர். சமீபத்தில்கூட அன்னபூரணி எனும் பெண் தன்னை கடவுள் என்று கூறிகொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கியது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. அதற்கும் முன்னர் நித்தியானந்தாவும் தன்னை கவுள் என்று கூறிக்கொண்டிருந்தார். தமிழகம் மட்டுமல்லாது வட மாநிலங்களிலும் பலர் இப்படி கிளம்பியிருக்கிறார்கள்.

ஆனால் கொஞ்சம் காலத்திலேயே இவர்கள் மீது ஏராளமான புகார்கள் எழத்தொடங்கிவிடுகிறது. குறிப்பாக பாலியல் வன்கொடுமைகள், பண மோசடி, நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு இந்த திடீர் கடவுள்கள் ஆளாகிவிடுகின்றனர். அந்த வகையில் கோசலராமன் குறித்தும் பக்தர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சிலர், கோசலராமன்தான் உண்மையான கடவுள் என்று கூறுகின்றனர். பலரும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். "கடவுள் என்பது உருவத்தில் கிடையாது உள்ளத்தில்தான் இருக்கிறது. உள்ளத்தில் இருக்கும் கடவுளுக்குதான் உருவம் கொடுத்து வழிப்பட்டு வருகிறோம். ஒவ்வொரு காலத்திற்கும் கடவுள்களின் உருவம் மாறுபட்டு வந்திருக்கிறது. கடவுள்கள் எப்போதும் கடவுளாகவே இருக்கின்றனர். மனிதர்கள் மட்டும் ஏன் கடவுளாக முயற்சிக்கிறார்கள்?" என்று பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications