போச்சு போச்சு.. திடீரென ட்விஸ்ட் தந்த எடப்பாடி.. ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டி.. ஆனால் ஒரு "அபாயம்"
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் கணிப்புகளை பொய்யாக்கி திடீரென அதிமுக இந்த தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதிமுகவின் இந்த திடீர் முடிவால் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் சூடு கூடி உள்ளது. ஆனால் அதே சமயம் இரட்டை இலை முடங்கும் அபாயமும் இதனால் ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் கடந்த ஜனவரி 4ம் தேதி மரணம் அடைந்தார்.

இடைத்தேர்தல்
இதனால் இங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த ஈரோடு கிழக்கு தொகுதி என்பது 2008 தொகுதி மறுவரையறையின் போதுதான் இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்து உள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இங்கே போட்டியிட்டது. அதன் மூலம் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் இங்கே வென்றார். அதன்பின் 2011 சட்டசபை தேர்தலில் இங்கே அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு வென்றார். அதிமுக ஆதரவு தொகுதி என்று பார்க்கப்பட்ட இந்த கோட்டையில் 2021ல் காங்கிரஸ் வேட்பளார் ஈவெரா திருமகன் திமுக கூட்டணியில் நின்று வென்றார். அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரை விட 9 ஆயிரம் வாக்குகள் மட்டும் அதிகம் வாங்கி இவர் வெற்றிபெற்றார்.

காங்கிரஸ்
இந்த தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிட உள்ளது. கூட்டணி தர்மத்தை காத்து காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் இதே தொகுதியை காங்கிரஸ் விட்டுக்கொடுத்து உள்ளது. காங்கிரஸ் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில்தான கடந்த முறை இங்கு போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜா இங்கு மீண்டும் போட்டியிடுவார். அதிமுக கூட்டணி சார்பாக அவர் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக போட்டி
இதன் மூலம் ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. தமிழ் மாநில காங்கிரசின் ஜிகே வாசனிடம் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக கோரிக்கை விடுவித்துள்ளது. ஆனால் அதிமுகவின் இந்த செயலால் அதிமுக சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இப்போது எடப்பாடி தரப்பில் இருந்து அவர் ஒரு வேட்பாளரை நிறுத்துவார். எடப்பாடி இப்படி வேட்பாளரை நிறுத்துவதால் அதிமுகவில் இரட்டை இலை சின்னத்திற்கு சிக்கல் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கு நடப்பதால், அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் இன்னும் கட்சியில் அமலுக்கு வரவில்லை

இன்னும் அமலுக்கு வரவில்லை
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டது, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது, பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது என்று எதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. சமீபத்தில் கூட தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அனுப்பிய கடித்ததில், தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணையாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உள்ளதாக மட்டுமே தகவல்கள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணைய ஆவணத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதில், அதிமுகவில் இன்றைய தேதி வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரும் வரை இதில் மாற்றம் இல்லை. சமயத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கில், தீர்ப்பு வந்தாலும், பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா என்பதும் சந்தேகம்தான். தேர்தல் ஆணையம் இந்த பொதுக்குழு முடிவை ஏற்கும் வரை, ஓபிஎஸ்தான் ஒருங்கிணைப்பாளர், எடப்பாடிதான் இணை ஒருங்கிணைப்பாளர்.

கேள்வி
அப்படி இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது தரப்பில் வேட்பாளரை நிறுத்தினால் போட்டிக்கு ஓபிஎஸ் நிறுத்துவார். தேர்தல் ஆணையம் இதில் முடிவு எடுக்காத பட்சத்தில், ஓபிஎஸ் போட்டிக்கு வேட்பளாரை நிறுத்தினால்.. கதை க்ளோஸ். இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்புகள் அதிகம். ஓபிஎஸ் எப்படியும் இறங்கி வந்து எடப்பாடி வேட்பளாரை ஏற்க மாட்டார். கண்டிப்பாக எடப்பாடிக்கு நிறுத்தும் ஆளுக்கு எதிராக ஓபிஎஸ் ஆளை இறக்குவார். தற்போதைய நிலவரப்படி அதிமுக வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கலின் போது பி பார்மில் இருவரும் கையெழுத்து போட வேண்டி இருக்கும். இதில் கையெழுத்து போடவில்லை என்றால் அதிமுக வேட்பாளர் இங்கே இறங்க முடியாது. நகர்ப்புற உள்ளாட்சி இடைத்தேர்தலில் இப்படித்தான் நடந்தது.

எடப்பாடி சின்னம்
அப்படியே எடப்பாடி இறங்கி வந்து கையெழுத்து போட்டாலும், அவர் ஓ பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் ஆகிவிடும். ஒருவேளை இந்த பிரச்சனை தேர்தல் நேரத்தில் விஸ்வரூபம் எடுத்தால்.. இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க கூட வாய்ப்புகள் உள்ளன. அதன்பின் அதற்கு தனியாக எடப்பாடி - ஓபிஎஸ் சட்ட போராட்டம் நடத்த வேண்டி இருக்கும். எடப்பாடி ஏன் தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. ஆனாலும் அவரின் இந்த முடிவு காரணமாக கட்சியின் சின்னத்திற்கே சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications