திமுகவுடன் எல்லா விஷயத்திலும் ஒன்றுபட முடியாது! நாங்க யாருக்கும் அடிமையில்லை! -கார்த்தி சிதம்பரம்
காங்கிரஸ் யாருக்கும் அடிமையில்லை என கார்த்தி சிதம்பரம் கூறுகிறார்.
ஈரோடு: திமுகவுடன் எல்லா விஷயத்திலும் காங்கிரஸ் ஒன்றுபட முடியாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள கட்சி காங்கிரஸ் கட்சி என்றும் அதனால் தாங்கள் யாருக்கும் அடிமையில்லை எனவும் கூறியிருக்கிறார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனைக் கூறினார். இதனிடையே ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய வந்தாரா திமுக காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சலை கிளப்ப வந்தாரா என கதர்ச்சட்டையினர் பலரே விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.

கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்தை பொறுத்தவரை எப்போது தடாலடியாக பேசக்கூடியவர். அந்த வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது சில காட்டமான கருத்துக்களை பதிவு செய்தார். திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம் என்பதற்காக அந்தக் கட்சியுடன் எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் காங்கிரஸ் ஒத்துப் போக முடியாது எனத் தெரிவித்தார்.

அடிமை கிடையாது
காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு கொள்கை, நிலைப்பாடு இருப்பதாகவும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இருக்கக் கூடிய தேசியக் கட்சி காங்கிரஸ் கட்சி எனவும் தெரிவித்தார். தாங்கள் யாருக்கும் அடிமை கிடையாது தங்களிடமும் யாரும் அடிமையாக இருக்கக் கிடையாது எனத் தெரிவித்தார். மதச்சார்பின்மை, சுயமரியாதை, தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதி உள்ளிட்ட விவகாரங்களில் எல்லாம் திமுகவுடன் ஒத்துப் போகிறோம் என்று கூறினார்.

மாறுபட்ட கருத்து
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்ததில் திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மாறுபட்ட கருத்து இருப்பது உண்மை எனக் கூறினார். தமிழ்நாட்டின் நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டுமென்றால் வரிகளை உயர்த்தித் தான் ஆக வேண்டும் என்றும் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அரசின் கஜானா காலி செய்யப்பட்டுவிட்டதாக சாடினார்.ே

திமுக காங்கிரஸ் கூட்டணி
இதனிடையே ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய வந்தாரா திமுக காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சலை கிளப்ப வந்தாரா என கதர்ச்சட்டையினர் பலரே விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.கார்த்தி சிதம்பரத்தின் இந்தக் கருத்தை திமுகவினர் ரசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications