எனக்கு தமிழ் மாப்பிள்ளை பாருங்க.. "கண்ணே கலைமானே".. மேடையில் தமிழில் பாடி.. உருகிய கேரளா பெண் எம்பி!
ஈரோடு: ஈரோட்டில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் கேரளா பெண் எம்பி ரம்யா ஹரிதாஸ் தமிழ் பாடல்களை பாடி கவனம் ஈர்த்தார்.
தேசிய இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஈரோட்டில் நேற்று நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகிகள், புதிதாக வெற்றிபெற்ற காங்கிரஸ் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தேசிய காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ஸ்ரீனிவாஸ் பிவி, கேரள காங்கிரஸ் ஆலந்தூர் எம்பி ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கேரளா
இந்த நிகழ்வில் மொழி உரிமை பற்றி பேசிய ரம்யா ஹரிதாஸ், தமிழ்நாட்டில் இந்தி பாடல்கள் பலருக்கு தெரியும். நான் ஒரு தேசிய இளைஞர் காங்கிரஸ் செயலாளர். இதற்காக நான் இந்தி பாடல் பாட முடியுமா ? பாடினால் உங்களுக்குத்தான் பிடிக்குமா? சொல்லுங்கள் பிடிக்குமா? என்று கேட்டார். இதையடுத்து கூட்டத்தில் உள்ளவர்கள் பிடிக்காது என்று கத்தவும் சட்டென எம்பி ரம்யா ஹரிதாஸ், கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே, என்று பாட தொடங்கினார்.

மொழி உரிமை
இவர் இப்படி திடீரென தமிழில் ரகத்தோடு பாடியதை கேட்டு அங்கு இருந்த நிர்வாகிகள் ஆச்சர்யத்தில் மெய் மறந்து பார்க்க தொடங்கினர். நிர்வாகிகள் பலரும் கை தட்டி அந்த எம்பியை உற்சாகமூட்ட தொடங்கினர். இதை கேட்டு அவரும் விடாமல் தொடர்ந்து பாடினார். பாதி பாடல் வரை சுருதி குறையாமல் மிகவும் சிறப்பாக அந்த எம்பி பாடினார். இதை காங்கிரஸ் நிர்வாகிகள் வியப்புடன் பார்த்தனர்.

ரம்யா ஹரிதாஸ்
தொடர்ந்து பேசிய எம்பி ரம்யா ஹரிதாஸ், நான் பொள்ளாச்சி பக்கம்தான். பாலக்காட்டில் ஆலத்தூர் என்பதுதான் என்னுடைய தொகுதி. அங்கே எல்லோரும் தமிழ் நல்லா பேசுவார்கள். அங்கே நான் மலையாள பாடல் பாட முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு பிடித்தது தமிழ் பாடல். அவர்கள் கேட்பது தமிழ் பாடல் என்பதால் நான் தமிழில் பாடுவேன் என்று கூறி மீண்டும் எம்பி ரம்யா ஹரிதாஸ் தமிழில் பாட தொடங்கினார்.

பொள்ளாச்சி
ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு சேதி சொன்ன மன்னவரு தான் எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான் என்று என்று முழு பாடலையும் ராகம் தவறாமல் அந்த எம்பி பாடினார். இந்த பாடலையும் கேட்டு அங்கு இருந்த தேசிய இளைஞர் காங்கிரசை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் போன்ற நிர்வாகிகள் மலைத்து போனார்கள்.

ஆச்சர்யம்
இதையடுத்து பேசிய எம்பி ரம்யா ஹரிதாஸ்.. நான் இதுவரை திருமணம் செய்யவில்லை. எனக்கு இதுவரை பையன் கிடைக்கவில்லை. ஏதாவது தமிழ் பையன் இருந்தால் அண்ணன் ஸ்ரீனிவாஸிடம் சொல்லுங்கள் என்று காமெடியாக கூறினார். எம்பி ரம்யா ஹரிதாஸ் இப்படி நன்றாக தமிழில் பேசி, பாடியது அங்கு இருந்த பலரையும் கவர்ந்தது. இவரின் ஆலத்தூர் தொகுதியில் தமிழர்கள் பலர் வசிப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications