கேட்டாலே நடுங்குதே.. அதுக்காக இப்படியா.. தெருநாயை ரத்தம் சொட்ட சொட்ட.. "கொடூரன்"..இதுல கெத்து வேற
ஈரோடு: தனது செருப்பின் மீது தெருநாய் ஒன்று சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அந்த நாயை மிகக் கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
தான் செய்தது தவறு என்பதை கூட உணராமல், ஏதோ சாதனையை செய்ததை போல அதை சமூக வலைதளத்திலும் பதிவிட்டிருக்கிறான் அந்தக் கொடூர மனம் படைத்த இளைஞன்.
இந்த விவகாரம் பூதாகரமானதை தெரிந்துகொண்ட அந்த சைக்கோ, தற்போது தலைறைவாகி இருக்கிறான். போலீஸார் அவனை தேடி வருகின்றனர்.

மனித மிருகங்கள்..
'மனிதன்' என்ற போர்வையில் குரூர மனம் படைத்தவர்கள் சிலர் இன்னும் நம் மத்தயில் உலவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோன்ற மனிதர்களை தோற்றத்தை பார்த்து நாம் கண்டுபிடிக்க முடியாது. எனினும், அவர்களின் செயல்களும், பேச்சுகளும் சில சமயங்களில் அவர்களுக்குள் மறைந்திருக்கும் மிருகத்தை வெளிப்படுத்திவிடும். சிலர் சட்டத்துக்கு பயந்தும், சந்தர்ப்பம் கிடைக்காமலும் சக மனிதர்களிடத்தில் தங்கள் குரூர குணத்தை காண்பிக்காமல் இருப்பார்கள். ஆனால், மிருகங்களிடம் அவர்கள் தங்கள் குரூரத்தை வெளிப்படுத்துவார்கள். மிருகத்தை தானே துன்புறுத்துகிறார்கள் என இவர்களை நாம் அலட்சியமாக நினைக்கக் கூடாது. நாளை சந்தர்ப்பம் கிடைக்கையில், சக மனிதர்களுக்கும் மிக கொடூரமான ஆபத்தை இவர்கள் விளைவிப்பார்கள். அப்படியொரு குரூர எண்ணம் படைத்த இளைஞர் ஒருவர் செய்த செயலைதான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.

நாயை பார்த்தாலே..
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (27). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தொழிற்பேட்டை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இதனிடையே, அவர் வசிக்கும் வீட்டின் அருகே தெருநாய் ஒன்று இருந்துள்ளது. அங்கிருப்பவர்கள் சாப்பாடு போடுவதால் அந்த நாயும் அங்கேயே இருந்துள்ளது. மேலும், அந்த நாய் இருப்பது அந்த தெருவுக்கே பாதுகாப்பாகவும் இருந்துள்ளது. ஏனோ தெரியவில்லை.. தினேஷுக்கு அந்த நாயை கண்டாலே பிடிக்காது எனக் கூறப்படுகிறது. அந்த நாய் அமைதியாக படுத்திருந்தாலும் அதன் மீது கற்களை எரிந்து விரட்டுவதை தினேஷ் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

புது செருப்பு..
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தினேஷ் தனக்கு புதிய செருப்பு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த சூழலில், நேற்று வீட்டுக்கு வந்த அவர், கேட்டுக்கு வெளியே செருப்பை கழட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்த போது, அந்த தெருநாய் அவரது செருப்பின் மீது சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தது. இதை பார்த்து ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். பின்னர், அந்த நாயை துரத்தி துரத்தி கல்லால் அடித்திருக்கிறார் தினேஷ். இதில் அந்த நாய்க்கு காலில் அடிபட்டதால் ஓட முடியாமல் போயுள்ளது. இதையடுத்து, அந்த நாயை ரத்தம் சொட்ட சொட்ட கல்லால் அடித்தே கொன்றிருக்கிறார் தினேஷ்.

"போட்டுத் தள்ளிட்டேன்"
ஒரு வாயில்லா ஜீவனை அடித்துக் கொன்றுவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி கூட இல்லாமல், அதை பெருமையாக தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டிருக்கிறார் தினேஷ். கொலை செய்யப்பட்ட நாயின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, அதற்கு கீழே, "வாங்கி வச்ச புது செருப்புல சிறுநீர் கழிச்சுச்சு.. அதான் போட்டு தள்ளிட்டேன்" என எழுதியிருந்தார். இந்த பதிவை பார்த்த பலரும், தினேஷை திட்டி தீர்த்தனர். நாயை கொன்றதற்காக மிருகவதை தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் பதிவிட்டனர்.

"மன்னிச்சிடுங்க"..
தனது செயலுக்காக தன்னை எல்லோரும் பாராட்டுவார்கள் என நினைத்து அந்தப் பதிவை போட்ட தினேஷ், எதிர்மறையாக நடந்து கொண்டிருப்பதை பார்த்து பயத்தில் அலறியுள்ளார். பின்னர், அந்த பதிவுக்கு கீழே, "நான் தெரியாமல் செய்துவிட்டேன்.. என்னை மன்னித்துவிடுங்கள்" என எழுதிவிட்டு தலைமறைவானார். இதனிடையே, விலங்குகள் நல அமைப்பினர் இதுகுறித்து போலீஸாருக்கு புகார் அளித்தனர். இதன்பேரில், தினேஷ் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications