வெறும் 72 மணி நேரம் தான்.. ஈரோடு களத்தில் தலைகீழ் மாற்றம்.. அதிர்ச்சியில் அதிமுக
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தே ஆக வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இதனால் கடந்த 72 மணி நேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தலைகீழாக மாறி உள்ளதாம். பணமழை பொழிவதாகவும்,வாக்களார்களை குத்தகைக்கு எடுத்து உணவு முதல் சரக்கு வரை திமுகவினர் தருவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று விரும்பிய எடப்பாடி பழனிசாமிக்கு, திமுகவின் அதிரடியான வியூங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம். திருமங்கலம் பார்முலாவை மிஞ்சிவிட்டதாக அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
திமுகவினர் வாக்காளர்களை இன்ப சுற்றுலா அழைத்து செல்வதாகவும், பணத்தை தண்ணீராக செலவழிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரே நேற்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுபற்றி அதிமுகவினர் கூறும் போது, அதிமுக வேட்பாளர் தென்னரசு பிரச்சாரத்திற்கு வரும் போது, வாக்காளர்கள் பலரை, கொடிவேரி, பவானி என ஒரு நாள் சுற்றுலாவுக்கு திமுகவினர் ழைத்துச் சென்றுவிடுகின்றனர். ஆளுங்கட்சி அமைத்திருக்கும் 120 தேர்தல் பணிமனைகளிலும் விதிமீறல்கள் நடக்கிறது என்று கொதித்தனர்.

பகலில் உணவு
மேலும் அதிமுகவினர் கூறும் போது, திமுகவினர் வாக்காளர்களை பந்தலில் அடைத்து வைத்து உதயநிதி படங்களை போட்டுவிட்டு மதியம் சாப்பாடு தருகிறார்கள். இடையில் டீ, காபி தருவதுடன், இரவில் மதுவும் பணமும் தந்து அனுப்பி வைக்கிறார்கள். இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடைபெறுகிறது என்கிறார்கள் அதிமுகவினர்.

கொட்டகை
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியே அண்மையில் பிரச்சாரத்தில் பேசும் போது கடுமையாக கொந்தளித்தார். அப்போது அவர் கூறும் போது, "அதிமுகவினர் ஆட்சியின்போது நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த நாங்கள் வாக்காளர்களை எந்தக் கொட்டகையிலும், அடைத்துவைத்தது கிடையாது. ஆனால், இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஆடு, மாடுகளைப் பட்டிகளில் அடைத்துவைப்பதைப்போல தற்போதைய ஆளும் திமுகவினர் மக்களை அடைத்து வைத்து வாக்கு கேட்கிறார்கள்.

வாக்காளர்களை சந்திப்பேன்
இந்த நிலை தொடர்ந்தால், எந்த இடத்தில் வாக்காளர்களை அடைத்து வைத்திருக்கிறார்களோ அங்கு நானும், அதிமுகவினரும் நேரில் சென்று அடைத்துவைத்திருக்கும் வாக்காளர்களைச் சந்தித்து வாக்குகளைக் கேட்பேன். வாக்காளர்கள் இருக்கும் இடத்தில்தான் வாக்குகளைச் சேகரிக்க முடியும். எனவே, பட்டிகளில் மக்களை அடைத்துவைப்பதை தேர்தல் அதிகாரிகள் வேடிக்கை பார்க்காமல் தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே தேர்தல் ஆணையத்துக்குப் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதிக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசியருந்தார்

டெபாசிட் தேறக்கூடாது
ஆரம்பத்தில் திமுகவுக்கு நிகராக தண்ணீராக பணத்தைவாரி இறைத்த அதிமுக இப்போது செலவுகளை குறைத்துள்ளதாக சொல்கிறார்கள் ஈரோடுவாசிகள். தற்போதைய நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்பதே திமுகவின் விருப்பமாக உள்ளதாம். அதிமுக உள்ள எந்த கட்சியும் டெபாசிட் கூட வாங்க முடியாத அளவிற்கு தள்ள வேண்டும் என்று மேலிட உத்தரவு பறந்திருக்காம். அதனால் தான் களத்தில் திமுகவினர் முழுமையாக இறங்கி உள்ளார்களாம்.. பல ஸ்வீட் பாக்ஸ்கள் இறக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதனிடையே ஈரோட்டில் காங்கிரஸ் கட்சிகளைவிட முழுமையாக திமுக கரைவேட்டிகள் தான் காணப்படுகிறது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தார்.

கறி முதல் குக்கர் வரை
சில இடங்களில் வீட்டுக்கும் ஒரு கிலோ கறி இலவசமாக வழங்கப்பட்டதாகவும், பட்டுப் புடவை, எவர் சில்வர் குடம், குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்தல் ஆணையத்தில் அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் புகார் அளித்துள்ளது. தேமுதிக இந்த தேர்தலை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம் என்கிற அளவில் எச்சரித்துள்ளது. அதிமுக, திமுக இரண்டுமே தொகுதிகளில் கோடிகளை கொட்டி செலவு செய்தாகவும், வாக்காளர்களை மூளை சலவை செய்து வாக்கு பெற எந்த எல்லைக்கும் இரு கட்சிகளும் செல்கின்றன என்றும் நாம் தமிழர் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.












Click it and Unblock the Notifications