அருந்ததியர்கள்.. வார்த்தையை விட்ட சீமான்.. எல்லாம் "அவங்க" மேல் உள்ள கோபமாமே! பின்னணியை சொன்ன புள்ளி
அருந்ததியர்களை வந்தேறிகள் என்று கூறிவிட்டு அவர்களிடம் வாக்கு கேட்க செல்கிறார் சீமான், அது தவறு என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: தெலுங்கர்கள் மீதான கோபத்தை காட்ட வேண்டும் என்று சீமான் அருந்ததிய மக்களை விமர்சனம் செய்கிறார். அதனால்தான் அருந்ததியர்கள் நாம் தமிழரை விரட்டி அடிக்கிறார்கள், என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சீமான் அருந்ததியர்களுக்கு எதிராக பேசியது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக இரண்டு நாட்களுக்கு முன் சீமான் பிரச்சாரம் செய்தார். மேனகா முதலியார் ஜாதியை சேர்ந்தவர். அதனால் முதலியார் ஜாதி பற்றி பேசிய சீமான், முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? மானத் தமிழ் மக்கள்தான் முதலியார்.
போர் நடந்தால் முதலில் வேல் ஏந்தி வரும் மக்கள்தான் முதலியார். அவர்களை தூய்மை பணி செய்ய விஜய நகர பேரரசை சேர்ந்த தெலுங்கன். அவர்கள் வரவில்லை என்றதும் வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் எனவும் சீமான் பேசினார். அதாவது ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கு பேசும் தூய்மை பணியாளர்கள்தான் அருந்ததியர்கள் என்று சீமான் கூறினார். அவரின் இந்த பேச்சு காரணமாக ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் அருந்ததியர்கள் போராட்டங்களை செய்து வருகின்றனர். நாம் தமிழர் நிர்வாகிகளை விரட்டி அடித்துக்கொண்டு இருக்கின்றனர்.
சீமானின் இந்த பேச்சு தவறானது என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் ஒன்இந்தியா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சீமான்
அவர் தனது பேட்டியில், சீமான் அருந்ததியர்கள் பற்றி பேசியது தவறு. அடிப்படை அரசியல் அறிவே இல்லாத நபர் என்றால் சீமான்தான். திராவிட மொழிகளின் தாய் தமிழ். இது எல்லோருக்கும் தெரியும். திராவிடத்தை வீழ்த்த வேண்டும் என்றுதான் ஆரியன் தமிழ் மொழியை உடைத்து தெலுங்கை உருவாக்குகிறான். கேரளாவில் மலையாளத்தை உருவாக்குகிறான். தமிழின் வரலாற்றை ஐநாவில் மக்கள் புரிந்து வைத்து இருக்கிறான். ஆனால் இங்கே இருக்கும் மக்கள் உணரவில்லை. ஆரிய மதத்தை ஏற்றுக்கொள்ளாத தலித் மக்கள், அருந்ததியர்கள், சாணார்களை ஆரியன் ஊரை விட்டே விரட்டிவிட்டுவிட்டான். ஆரியனை எதிர்த்த மக்களை அவன் ஒதுக்கப்பட்ட மக்களாக்கிவிட்டான்.

அருந்ததியர்கள்
அப்படி ஒரு சமூகம்தான் அருந்ததிய சமுகர்கள். இவர்கள் மீது விஜயநகர பேரரசு மூலம் தெலுங்கு அழுத்தப்பட்டது. மக்கள் அடிமையாக வைக்கப்பட்டு, சாணம் அள்ளுவதற்கு, உடல்களை அப்புறப்படுத்துவதற்கும் இவர்களையும் அந்த பேரரசில் இவர்களை பயன்படுத்தினார்கள். இதை எல்லாம் எதிர்த்து போராடியவர்கள்தான் அருந்ததிய சமூகத்தினர். தெலுங்கு மக்கள் மீதான எதிர்ப்பை காட்ட வேண்டும். தெலுங்கர்கள் மீதான கோபத்தை காட்ட வேண்டும் என்று சீமான் அருந்ததிய மக்களை விமர்சனம் செய்கிறார். அதனால்தான் அருந்ததியர்கள் நாம் தமிழரை விரட்டி அடிக்கிறார்கள்.

நாம் தமிழர்
அருந்ததியர்களை வந்தேறிகள் என்று கூறிவிட்டு அவர்களிடம் வாக்கு கேட்க செல்கிறார் சீமான்.1000 வருடங்களுக்கும் மேலாக அவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களை சீமான் எதிர்க்கிறார். சிறுபான்மையினரை எதிர்த்தால் பெரும்பான்மை இந்துக்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்று பாஜக நினைக்கிறது. அதைத்தான் சீமான் செய்கிறார். சிறுபான்மை தெலுங்கர்கள், கன்னடர்களை எதிர்த்தால் பெரும்பான்மை தமிழர்களை கவர முடியும் என்று சீமான் நினைக்கிறார். இது மிகப்பெரிய தவறு. வடவேங்கடம், தென் குமரி எல்லாம் தமிழ் கூறும் நல்லுலகு என்பதை மறக்க வேண்டாம். பீகார் திராவிட நாகரீகம். ஹரப்பா மொகஞ்சதரோ தமிழ் நாகரீகம்தான். அதன்பின்தான் தமிழர்கள் சாதி வாரியாக பிரித்தார்கள். தமிழர்களை சாதி வாரியாக பிரித்தது சனாதனம்.

தெலுங்கர்கள்
தெலுங்கர்கள், கன்னடர்கள் முன்னாள் தமிழர்களே. அவர்களின் மொழி உருவாகும் முன் அவர்களும் தமிழர்களே. சனாதனம் மூலம் இவர்கள் பிரிக்கப்பட்டனர். அதை புரிந்து கொள்ளாமல் சீமான் பேசுகிறார். அடிப்படை அறிவே இல்லாமல் சீமான் பேசுகிறார். சீமான் பேசுவது ஆர்எஸ்எஸ் குரல். திராவிடர்களை பிரிக்கும் ஆர்எஸ்எஸ் குரலில் சீமான் பேசுகிறார். தமிழ் பேசும் தமிழர்களுக்கு ஆதரவாக கட்சி விதிகளை கொண்டு இருக்கிறது நாம் தமிழர் கட்சி. கட்சியின் அந்த பை லாவே தவறானது. வன்மத்தை உருவாக்கும் செயலை அவரின் அரசியல் செய்கிறது. அவரின் அரசியல் ஆபத்தான அரசியல் என்று மூத்த செய்தியாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications