புதுச்சேரி பாணியில்தான் ஈரோட்டிலும் விஜய் பொதுக்கூட்டம் நடக்கப்போகுதா? சுடச்சுட செங்கோட்டையன் கொடுத்த பதில்
ஈரோடு: வரும் 16 ஆம் தேதி ஈரோடு சத்தியமங்கலம் டோல்கேட் அருகே விஜய் பிரசார கூடத்திற்கு 84 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக கே ஏ செங்கோட்டையன் கூறியுள்ளார். 19 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், விஜய் தனது பரப்புரை வாகனம் மீது நின்றபடி பரப்புரை செய்வார் என்றும் கூறியுள்ளார்.
கரூர் கூட்டநெரிசலுக்கு பிறகு புதுவையில் இன்று விஜய் பொதுக்கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இதன் பிறகு ஈரோட்டில் விஜய்யின் பிரசாரம் நடக்க இருக்கிறது. வரும் 16 ஆம் தேதி விஜய் பொதுக்கூட்டம் நடத்த தவெகவினர் திட்டமிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தவெகவில் சமீபத்தில் இணைந்த கே ஏ செங்கோட்டையன் செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஈரோடு சத்தியமங்கலம் அருகே டோல்கேட் பகுதியில் 19 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இன்று அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த கே ஏ செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
கடைசியாக கரூரில் விஜய்யின் ரோடு ஷோ கூட்டம் நடந்தது. இதற்கு பிறகு தமிழகத்தில் முதல் முறையாக வரும் 16 ஆம் தேதி ரோடு ஷோ நடக்க இருக்கிறது. ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் உள்ள 19 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் நடக்க இருக்கிறது. 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த இடத்தில் இன்று ஆய்வு செய்தோம். இந்த இடம் சரியான இடம் என்பதையும் போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதற்கு பிறகு என்னென்ன விதிமுறைகள் இருக்கின்றது என்பதை கடிதமாக எங்களிடம் அளித்து இருக்கிறார்கள். மொத்தம் 82 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை இளைஞர்களின் எழுச்சி நாயகன், நாளைய முதல்வர் விஜய் இங்கே வர இருக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகிகள், கழக ஒருங்கிணைப்பாளர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செய்து வருகிறோம். தமிழகத்தில் முதல்முறையாக ஒரு பொது இடத்தினை தேர்வு செய்து இங்கு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். இதுவே மற்ற மாவட்டங்களுக்கும் வழிகாட்டியாக அமையும்.
நிகழ்ச்சி நடைபெறும் போது தான் அதற்கான பாதுகாப்பு எப்படி அளிக்கப்படுகிறது என்பதை சொல்ல முடியும். விஜய் தனது பிரச்சார வாகனத்தில் நின்றபடி பேசுவார். சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டம் நடைபெறுவதால், இப்போதைக்கு ஈரோட்டை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
கியூ ஆர் கோடு காட்டி தான் அத்தனை பேரும் இன்று புதுவை பொதுக்கூட்டத்திற்கு சென்றார்களா?.. நீங்கள் தான் செய்தி போட்டீங்க.. முதல் 500 பேருக்கு மட்டும் தான் கியூ ஆர் கோடு காண்பித்து சென்றார்கள். ஆனால் அதற்கு பிறகு கூட்டம் அதிகரித்ததால் கும்பல் கும்பலாக அனுமதிக்கப்பட்டீர்கள் என்று.. வரும் கூட்டத்தை எங்களால் தடுக்க முடியவில்லை என நீங்கள் தான் கூறினீர்கள்.. இவ்வாறு அவர் கூறினார்.
டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர் செல்வம் என்.டி.ஏ கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது என ஒரு சிலரும், தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக ஒரு சிலரும் கூறி வருகிறார்களே இது பற்றி என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. தேர்தல் நெருங்கட்டும். காலம் தான் பதில் சொல்லும்" என்று பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications