பொங்கல் ரூ.100.. இட்லி ரூ.50.. ஈரோட்டில் குமுறும் தவெகவினர்... உணவுக்கு கைவிரித்த செங்கோட்டையன்
ஈரோடு: ஈரோடு விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் பல ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் தவெக சார்பில் உணவு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் தொண்டர்கள் அருகே உள்ள கடைகளில் சாப்பிட்டு வரும் நிலையில் அங்கு உணவுகளின் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் இந்த மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டம் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் என பல ஆயிரம் பேர் காலை முதல் கூடி வருகின்றனர். 10 ஆயிரம் தொண்டர்கள் மற்றும் 25 ஆயிரம் பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்காக 80 ஏக்கரில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தார். அவர் தனது பலத்தை காட்டும் வகையில் தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னின்று நடத்துகிறார். சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. 80 ஏக்கர் நிலம் தயார் செய்யப்பட்டுள்ளது. 60 ஏக்கர் கார்களுக்கும், 20 ஏக்கர் இருசக்கர வாகனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு வருபவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் ஏதுமில்லை. தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்படும் என்று செங்கோட்டையன் நேற்று அறிவித்து இருந்தார். இதனால் இன்று கூட்டத்துக்கு வந்த தவெக தொண்டர்கள் அருகே உள்ள ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட்டனர். அப்போது அங்குள்ள உணவு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்த்தி விற்கப்பட்டது.
அதன்படி ஒரு பொங்கல் ரூ.70 முதல் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 இட்லி ரூ.50, ஒரு தோசை ரூ.30 முதல் ரூ.60, ஒரு டீ - காபி ரூ.20 முதல் ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் தொண்டர்கள் கலங்கி போய் உள்ளனர். இதனால் தவெக தொண்டர்கள் கடும் அதிருப்தியாகி உள்ளனர்.
இதுபற்றி தவெக தொண்டர் ஒருவர் கூறுகையில், ‛‛நான் அதிமுக மாநாடு, திமுக மாநாடுகளுக்கு சென்றுள்ளேன். ஆனால் அங்கெல்லாம் இந்த அளவுக்கு விலை ஏறியது இல்லை. இங்கு எல்லாமே விலை ஏற்றி விற்கின்றனர்.
ஈரோடு திருச்சி கபேவில் கூட பொங்கல் ரூ.50 தான். ஆனால் இங்கு சின்னக்கடையில் கூட ரூ.70, ரூ.100க்கு விற்கின்றனர். மற்ற நாட்களில் ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட பொங்கல் இன்று விலை உயர்த்தி உள்ளனர். அதுவும் சுகாதாரமின்றி உள்ளது. இப்படி சம்பாதித்து என்ன செய்ய போகிறார்கள். மக்கள் வருகிறார்கள் என்று ஏதாவது ஒன்று செய்யலாம். ஆனால் அவர்கள் விலையேற்றி விற்கின்றனர். இது அராஜகத்தை விட பெரியதாக உள்ளது'' என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications