ஈரோட்டில் கழிவறையில் பதுங்கியிருந்த கண்ணாடி விரியன் பாம்பு.. நள்ளிரவில் நடந்த ட்விஸ்ட்
ஈரோடு: ஈரோடு இபிபி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். நேற்று நள்ளிரவில் இவரது வீட்டிற்குள் சுமார் ஆறு அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரள்வதற்குள், அந்தப் பாம்பு வேகமாகச் சென்று வீட்டின் கழிவறையில் பதுங்கிக் கொண்டது. உடனடியாக இது குறித்து பாம்பு பிடி வீரருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர், கழிவறையில் பதுங்கியிருந்த அந்தப் பாம்பை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு லாவகமாகப் பிடித்தார். பிடிபட்ட அந்தப் பாம்பு மிகவும் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் என்பது தெரியவந்தது. நள்ளிரவில் விஷப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. வெயில் காலங்களில் இது போன்று பாம்புகள் வீட்டுக்குள் அதிகம் புகும் நிலையில் பாதுகாப்பாக இருக்க பாம்பு பிடி வீரர் அறிவுறுத்தி உள்ளார்.

கோவையில் நடந்த இன்னொரு சம்பவம்
நாகப்பட்டினம் மாவட்டம் புளியக்குடி பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் ஜீவராஜேஷ் என்பவர் வெல்டிங் தொழிலாளி ஆவார். இவர் அண்மையில் கோவை கரியாம்பாளையம் பகுதியில் உள்ள லேத் பட்டறைக்கு வேலை கேட்டு வந்தார். அப்போது ஆர்டர் குறைவாக வருவதால் வேலை இல்லை என்று கூறியிருகிறார்.
அங்கு வேலை செய்து வந்த பழக்கத்தில் அன்று ஒருநாள் மட்டும் அனுமதி கேட்டு தங்கியிருக்கிறார்.. அவர் தங்கி இருந்த அறையின் அருகே நாய் ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. அப்போது திடீரென நாய் குறைக்கும் சத்தம் கேட்டு அறையில் இருந்த ஜீவராஜேஷ் சென்று பார்த்துள்ளார். அப்போது நாய்க்குட்டிகளை பாம்பு கடிக்க முயன்று கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அவர் உடனே அருகில் கிடந்த கம்பை எடுத்து பாம்பை அடித்தார். பின்னர் அந்த பாம்பு இறந்துவிட்டதா என தூக்கிப் பார்த்துள்ளார்., திடீரென அந்த பாம்பு ஜீவராஜேஷின் கையில் கடித்தது.
இதையடுத்து அவர் அன்னூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலை கேட்டுவந்த இடத்தில் பாம்பிடமிருந்து நாய்க்குட்டிகளை காப்பாற்ற சென்று, தன் உயிரைத் தொழிலாளி பறிகொடுத்திருக்கிறார்.














Click it and Unblock the Notifications