பெரும்பான்மைக்கு சீட் கொடுத்த சீமான்.. ஈரோடு கிழக்கில் எந்த “ஜாதி” அதிகம்? வடஇந்தியர்கள் 3 சதவீதமாம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த ஜாதியினர் அதிகளவில் வசிக்கிறார்கள்? அங்கு ஜாதி அடிப்படையிலான அரசியல் பயனளிக்குமா என்பதை பார்ப்போம்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தொடர்பான விவாதங்கள் தமிழ்நாடு அரசியலில் சூடுபிடித்து இருக்கும் நிலையில் அங்கு எந்த சாதியினர் அதிகளவில் வசிக்கிறார்கள்? இந்த தேர்தலில் சாதிக்கு அடிப்படையிலான வாக்குகள் கட்சிகளுக்கு பயனளிக்குமா என்பது குறித்து அலசுவோம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு இருக்கின்றனர்.

வேட்பாளர்கள்
ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் - அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகள் வாக்குகளை பிரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 2,26,898 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர்கள் எண்ணிக்கை
இதில் 1,10,713 வாக்காளர்கள் ஆண்கள் என்றும், 1,16,140 பேர் பெண்கள் எனவும், 23 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் எனவும், ராணுவ வாக்காளர்கள் 22 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஜாதி அடிப்படையிலான வாக்குகள் இந்த தேர்தலில் முக்கியத்துவம் பெறுமா என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது. அதேபோல் ஜாதிவாரியான பல்வேறு புள்ளி விவரங்களும் வெளியாகி இருக்கின்றன.

ஜாதி வாக்குகள்
இதில் ஒரு புள்ளி விவரம் மற்றொரு புள்ளி விவரத்தில் இருந்து முரண்படுவதாக அமைந்து இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி என்பது மாநகரம் என்பதால் அங்கு ஜாதி அடிப்படையிலான புள்ளி விபரங்கள் நிலையற்றதாக உள்ளன. எனவே இந்த தேர்தலில் வேட்பாளர் தேர்வு தொடங்கி, பிரச்சாரம், திட்டங்கள் அறிவிப்பது வரை எதிலும் ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எந்த ஜாதி அதிகம்?
அனைத்து புள்ளி விபரங்களிலும் செங்குந்த முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்களே இந்த தொகுதியில் பெரும்பான்மையாக உள்ளனர். அடுத்த இடத்தில் கொங்கு வேளாள கவுண்டர் மற்றும் சிறுபான்மையினர் (இஸ்லாமியர், கிறிஸ்துவர்) வாக்குகளை புள்ளி விபரங்கள் கூட்டியும் குறைத்தும் காட்டி வருகின்றன.

வட இந்தியர்கள் 3%
அடுத்ததால அருந்ததியர் சமுதாயம் 6%, வன்னியர், தேவேந்திர குல வேளாளர், முக்குலத்தோர், நாயக்கர், நாடார், செட்டியார், வேளாளர், பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 1-5% க்கும் இருப்பதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அடுத்து இந்தி பேசும் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் 3% இருப்பதாக தெரிகிறது.

பெரும்பான்மைக்கு சீமான் சீட்
இதில் பிரதான கட்சிகளான காங்கிரஸ், அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் செங்குந்த முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக அறிவிக்கவில்லை. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா மட்டுமே அந்த சமுதாயத்தை சேர்ந்தவராவார். இருந்தபோதிலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெரும்பான்மை ஜாதி அரசியல் எடுபடாது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications