"வியர்க்காத அளவுக்கு நல்ல AC கார் தந்து டெல்லிக்கு அனுப்பிவைக்கிறேன்” எடப்பாடி பற்றி ஸ்டாலின் கிண்டல்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: "விவசாயிகளின் நெல் ஈரப்பதத் தளர்வு கோரிக்கைக்காக பிரதமரைச் சந்திக்கப் போவதாக எடப்பாடி பழனிசாமி சொன்னால், தமிழ்நாடு அரசின் சார்பில் நானே கார் ஏற்பாடு செய்து தருகிறேன். அதுவும் வியர்க்காத அளவுக்கு நல்ல ஏ.சி கார் தந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கிறேன்" என கிண்டல் செய்து பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

அண்மையில் டெல்லி பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு அமித் ஷாவின் வீட்டை விட்டு காரில் வெளியேறிய எடப்பாடி பழனிசாமி, தனது முகத்தை மூடிக் கொண்டு செல்வதைப் போன்ற வீடியோ இணையத்தில் வைரலானது. எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு சென்றதாக பலரும் விமர்சித்தனர்.

mk stalin edappadi palaniswami erode

அதற்கு அப்போது எடப்பாடி பழனிசாமி, "நான் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும்போது கைக்குட்டையை வைத்து முகத்தைத் துடைத்தேன். உடனே முகத்தை மூடினார் என அதை வைத்து மலிவான அரசியல் செய்கின்றனர். அமித் ஷாவுடனான சந்திப்பு வெளிப்படையானது. அமித் ஷா வீட்டில் இருந்து வெளியே வந்தபோது கார் இல்லாததால் கிடைத்த காரில் வந்தேன்." என விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம், பவானி அரசு கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி மீது கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

குறிப்பாக எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தன்னை மேற்கு மண்டலத்துக்காரர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த மண்டலத்துக்கு இதுபோன்ற செயல்களைச் செய்திருக்கின்றாரா? அப்படி நான் கேட்க விரும்பவில்லை! அவர் செய்தது எல்லாம் என்ன? வெறும் துரோகம்தான்! பச்சைத் துண்டை அணிந்து கொண்டு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பழனிசாமி அவர்கள் பச்சைத் துரோகம் செய்கிறார் என்று நான் சொன்னதும், அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

"நான் ஒரு விவசாயி, இப்போதும் விவசாயம் செய்கிறேன்" என்று சொல்கிறார் பழனிசாமி. அவர் ஒரு துரோகி, இப்போதும் தொடர்ந்து துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்லலாமே தவிர, அவரை விவசாயி என்று சொல்வது உண்மையான உழவர் பெருமக்களை அவமானப்படுத்துவதற்கு சமமாகிவிடும்!

நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒன்றிய பா.ஜ.க அரசு நிராகரித்துவிட்டார்கள். பழனிசாமி உண்மையான விவசாயியாக இருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்? பிரதமர் அவர்களே! மோடி அவர்களே! தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்கவேண்டும் பிரதமர் மோடி அவர்களே என்று அவர் சொல்லி இருக்க வேண்டுமா? வேண்டாமா? டெல்லியில் பல கார்களில் மாறி, மாறி சென்று யார் யாரையோ சந்திக்கிறீர்களே?

தமிழ்நாட்டு விவசாயிகளுக்காக கோரிக்கை வைக்க பிரதமரை சந்திக்கிறேன் என்று சொல்லுங்கள்... நீங்கள் சொன்னால் போதும்.... தமிழ்நாடு அரசு சார்பில், நானே உங்களுக்கு காருக்கு ஏற்பாடு செய்து அதுவும் வேர்க்காத அளவுக்கு நல்ல ஏசி காராக ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறேன்.

எடப்பாயி பழனிசாமி, இந்த மேற்கு மண்டலத்திற்கு இழைத்த பச்சைத் துரோகப் பட்டியலில், லேட்டஸ்ட் அடிஷன் கோவை மெட்ரோ ரயில் துரோகம். சென்னையை போல, கோவை, மதுரையின் வருங்கால வளர்ச்சிக்கும், மெட்ரோ ரயில் தேவை என்று நாம் கோரிக்கை வைத்தோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு அதையும் நிராகரித்திருக்கிறது.

'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், கோவைக்கு மெட்ரோ கொண்டு வருவோம்' என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். அதேபோல, பா.ஜ.க.வைச் சேர்ந்த கோவை சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் இதே கருத்தைச் சொல்லி இருக்கிறார். அப்படியென்றால், திமுக ஆட்சியில் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால்தான் கோவை, மதுரை மக்களை பா.ஜ.க. பழிவாங்குகின்றது என்று ஒப்புதல் வாக்குமூலமே வழங்கியிருக்கிறார்கள்." எனப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+