"சரக்கு" வாங்க போனா மறக்காம இனி "அடையாள அட்டை" கொண்டு போகனுமாம்! டாஸ்மாக் கடை நேரமும் குறைப்பாம்!
ஈரோடு: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை நேரம் விரைவில் குறைக்கப்படும்; 99% மதுபான கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 2
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை நேரத்தை குறைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கேகே ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரத்தை பகல் 2 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்; மதுபானம் வாங்குவோருக்கு தனி அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என கேகே ரமேஷ் அம்மனுவில் வலியுறுத்தி இருந்தார்.

இப்பொதுநலன் மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரத்தை குறைக்கலாம். மதுபானம் வாங்க வருவோருக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யலாம். இத்தகைய அடையாள அட்டை வைத்திருந்தா மட்டுமே மதுபானம் வழங்கப்பட வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகளை பகல் 2 மணி முதல் இரவு 8 மணிவரை மட்டுமே திறக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பு நேரம் குறைப்பு உள்ளிட்டவற்றை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை என கூறி மீண்டும் கேகே ரமேஷ், மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இம்மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளதா என்பதை வழக்கறிஞர் குழு மதுரை கடைகளில் நேரில் ஆய்வு செய்ய வேண்டும், அப்படி விலைபட்டியல் இல்லாத கடை பணியாளர்கள் மீது போலீசில் புகார் தர வேண்டும். இது தொடர்பாக அக்டோபர் 23-ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இது தொடர்பாக ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, 99% டாஸ்மாக் மதுபான கடைகளில் விலைபட்டியல் வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவு முழுமையாக கிடைத்த பின்னர் டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்படும் என்றார். மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி, டாஸ்மாக் மதுபான கடைகள் நேரம் குறைக்கப்படலாம்; மதுபானம் வாங்குவதற்கான அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications