இந்துத்துவாவை விமர்சிக்கும் புத்தக விற்பனைக்கு தடையா? ஈரோடு போலீசுக்கு த.பெ.தி.க அமைப்பு கண்டனம்
ஈரோடு: ஈரோடு புத்தக கண்காட்சியில் இந்துத்துவ பாசிசம்:வேர்களும் விழுதுகளும், அர்த்தமற்ற இந்து மதம் உள்ளிட்ட புத்தகங்களை விற்பனை செய்யக்கூடாது என காவல்துறையினர் மிரட்டியுள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் காவல்துறைக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம் சி.என்.கல்லூரி வளாகத்தில் தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை சார்பில், நடத்தப்படும் ஈரோடு புத்தக காட்சி கடந்து 4ம் தேதி தொடங்கியது. இந்த புத்தக காட்சியை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன். எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

கடந்த 4ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15ம் தேதி வரை 12 நாட்கள் இந்த புத்தக திருவிழா நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 வரை இங்கு புத்தகங்களை பார்வையிட்டு வாங்கலாம். குறிப்பாக இந்த புத்தக காட்சிக்கு நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. மொத்தம் 230 அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பதிப்பாளர்கள் லட்சக்கணக்கான புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த புத்தக காட்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் செந்திலதிபன் எழுதிய 'இந்துத்துவ பாசிசம்:வேர்களும் விழுதுகளும்' எனும் புத்தகத்தையும், அர்த்தமற்ற இந்து மதம் உள்ளிட்ட புத்தகங்களையும் விற்பனை செய்யக்கூடாது என காவல்துறை மிரட்டியுள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
"மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் செந்திலதிபன் எழுதிய "இந்துத்துவ பாசிசம்:வேர்களும் விழுதுகளும்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூல்களை ஈரோடு புத்தக கண்காட்சியில் எதிர் வெளியீடு அரங்கில் வைத்துள்ளார்கள். அந்த நூல்களை விற்பனை செய்யக் கூடாது_விளம்பர சுவரொட்டியை அகற்ற வேண்டும் என்று அரங்குக்குள் நுழைந்து ஈரோடு காவல்துறையினர் மிரட்டி இருக்கின்றார்கள்.
அதே போல திராவிடர் கழகத்தின் வெளியீடான மஞ்சை வசந்தன் எழுதிய அர்த்தமற்ற இந்து மதம் நூலையும் விற்பனை செய்யக் கூடாது என்று கூறியிருக்கிறார்கள். இந்த நூல்கள் தடை செய்யப்பட்ட நூல்களா? தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பல புத்தக கண்காட்சிகளில் தெருக்களில் விற்பனை செய்து கொண்டிருக்கின்ற இந்த நூல்களை விற்பனை செய்யக் கூடாது என்று ஈரோடு காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் யார்? ஈரோடு காவல்துறை யாருக்கு துணை போய்க் கொண்டிருக்கிறது? காவல்துறையின் இச்செயலை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications