திம்பம் மலைப்பாதையில்.. இனி இந்த 12 மணி நேரம் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை! மக்கள் போராட்டம்
ஈரோடு: வனவிலங்குகளைக் காக்கும் வகையில், திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலைகளில் ஒன்று ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதை.
இரு மாநிலங்களுக்கு இடையே இந்த சாலை வழியாகத் தான் 24 மணி நேரமும் சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து இருக்கும்.

வனவிலங்குகள்
1,455 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் இப்பகுதியில் தான் அமைந்துள்ளது. இரவு நேரங்களிலும் இந்த பாதையில் தொடர்ந்து வாகன சேவை இருந்து கொண்டே இருக்கும் என்பதால், விலங்குகள் சாலையைக் கடக்கும் போது, அவ்வப்போது நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் எதிர்பாராதவிதமாக அடிபட்டு உயிரிழந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சிறுத்தை, யானை, மான்கள் உள்பட 155 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன.

சென்னை உயர் நீதிமன்றம்
இந்தச் சூழலில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருக்கும் விலங்குகளைப் பாதுகாக்க திம்பம் மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்குத் தடை செய்ய வேண்டும் என்ற ஈரோடு மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாகக் கடந்த 2019இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இரவு நேரத்தில் வாகனங்களுக்குத் தடை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்துமாறு நேற்று முன்தினம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

போக்குவரத்து தடை
இதையடுத்து தமிழ்நாடு- கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதை இன்று மாலை 6 மணிக்கு மூடப்பட்டது. நாளை காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாய பொருட்களை வழக்கம் போலச் சென்னை அல்லது மேட்டுப்பாளையம் சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

போராட்டம்
இந்தத் தடையை நீக்கக்கோரி மலைவாழ் மக்கள், விவசாயிகள், வணிகர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பண்ணாரி சோதனைச் சாவடி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விவசாயிகளின் வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பதற்றத்தைத் தணிக்க அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications