எடப்பாடியிடம் அன்று பேசியது என்ன.. சீக்ரெட்டை சொன்ன செங்கோட்டையன்! உற்று கவனித்த அதிமுக தொண்டர்கள்
ஈரோடு: அதிமுகவில் இப்போது உட்கட்சி குழப்பம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கோபியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், தனது நிலைப்பாடுகளைக் கூறினார். அப்போது 2024 லோக்சபா தேர்தல் தோல்வி தொடர்பாகவும் அதன் பிறகு நடந்த விஷயங்கள் குறித்தும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் சூழலில், இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அக்கட்சியின் சீனியர் தலைவர் செங்கோட்டையனுக்கும் இடையே இப்போது மோதல் நிலவி வருகிறது.

செங்கோட்டையன்
இதற்கிடையே செங்கோட்டையன் தனது நிலைப்பாட்டை இன்று அறிவிப்பதாகக் கூறியிருந்தார். அதன்படி கோபி அதிமுக அலுவலகத்தில் இன்று செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த பிரஸ் மீட்டிற்காக வீட்டில் இருந்து கிளம்பிய அவர், ஒரு ரோட் ஷோவை நடத்தினார். அங்கு அதிமுக தொண்டர்கள் அதிகளவில் திரண்டிருந்த நிலையில், திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி செங்கோட்டையன் அவர்களைச் சந்தித்தார். தொடர்ந்து செங்கோட்டையன் பேசும்போது சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தது என்று செங்கோட்டையன் கூறினார். 2016க்கு பின் தொடர்ந்து பல தேர்தல்களைச் சந்தித்துவிட்ட போதிலும், அவை அனைத்திலும் வரிசையாக நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்று செங்கோட்டையன் கூறினார்.
தேர்தல் தோல்வி
குறிப்பாக 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தனித்துப் போட்டியிட்டது. அந்த லோக்சபா தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு தான், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்தத் தேர்தலைக் குறிப்பிட்டுப் பேசிய செங்கோட்டையன், 2024 லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்து இருந்தால் அதிமுக 30 இடங்களில் வென்று இருக்கும் என செங்கோட்டையன் கூறினார்.
எடப்பாடியிடம் பேசியது என்ன
செங்கோட்டையன் மேலும் கூறுகையில், "வேலுமணி கூட லோக்சபே தேர்தலைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.. அதிமுக அதில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாகவே லோக்சபா தேர்தலுக்குப் பிறகு மூத்த தலைவர்கள் அனைவரும் சேர்ந்து பொதுச்செயலாளரைச் சந்தித்தோம். கழகம் தொய்வோடு இருக்கிறது என்று கூறினோம். கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் எனக் கூறினோம். ஆனால், அதை ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை" என்றார்.
அதிமுக ஆட்சி மலர என்ன செய்யணும்
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், "தேர்தல் களத்தில் பிற கட்சிகள் எல்லாரும் பயணிக்கத் தொடங்கிவிட்டனர் என்பதால் இந்த ஒருங்கிணைப்பு விரைந்து நடக்க வேண்டும். இதே மனநிலையில் இருக்கும் அனைவரும் இணைந்து அதற்காகச் செயல்படுவோம். ஒருவேளை மாற்றம் ஏற்படவில்லை என்றால் அதிமுக ஆட்சி மலர ஏதுவான சூழலே இருக்காது.
தலைவர்கள் பேசும்போது வரும் கட்டம் என்பது வேறு. அதை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. அதேநேரம் இப்போது அதிமுக தொண்டர்களின் மனநிலை வேறாகவும் மக்கள் மனநிலை வேறாகவும் இருக்கிறது. அதை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டே கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன். மறப்போம் மன்னிப்போம் என நாம் செயல்பட வேண்டும். கட்சியில் இருந்து வெளியேறியவர்களையும் மீண்டும் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications