நிர்மலா சீதாராமன் உடனான சந்திப்பு.. யோசிக்காமல் செங்கோட்டையன் கொடுத்த ரியாக்ஷன்! ஆஹா நோட் பண்ணுங்க
ஈரோடு: கொடிவேரி பகுதியில் புதிதாக அமையவிருந்த சாய ஆலை குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த செங்கோட்டையனை அப்பகுதி மக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது நிர்மலா சீதாராமன் சந்திப்பு குறித்த கேள்விக்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்துள்ள கொடிவேரி என்பது சுற்றுலா பகுதியாகும். வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் பக்கத்தில் உள்ள ஊர்களில் இருந்தும் கூட கொடிவேரி அணைக்கு வருகை தருவார்கள். இதற்கிடையே இங்கு புதிய சாய ஆலை அமைக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியானது.

செங்கோட்டையன்
இதையடுத்து புதிய சாய ஆலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டங்களையும் நடத்தினர். இது தொடர்பாகச் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த செங்கோட்டையன், இது தொடர்பாகப் பேசினார். இதையடுத்து பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்நுட்ப குழு அமைத்து தேவையான ஆய்வு செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.
ரத்து செய்ய இருக்கிறார்கள்
இதையடுத்து செங்கோட்டையனின் முயற்சிக்கு விவசாய சங்கத்தினர் கோபியில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து கோபி இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே ஏ செங்கோட்டையன், "பெருமுயற்சி மூலம் வெற்றி அடைந்துள்ளோம். 15 நாட்களில் முன்னனுமதியைத் திரும்பப் பெற இருக்கிறார்கள். அனைவருடைய முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது.
பல்வேறு போராட்டங்களால் இதில் வெற்றி சாத்தியமாகியிருக்கிறது. விவசாயிகள் எடுத்த முயற்சியே இதற்கு முக்கிய காரணமாகும். ஊர் கூட தேர் இழுக்க வேண்டும் என்பது போல அனைவரும் சேர்ந்து இதை வெற்றிகரமாக முடித்துள்ளோம்" என்றார்.
கொடிவேரி
மேலும், கொடிவேரி அணை அருகே விடுமுறை நாட்களில் பல நூறு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் அவசர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை இருக்கிறது. அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு செங்கோட்டையன், "இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். சிங்கிரிபாளையம் சாலையை விரிவுபடுத்தி வருகிறோம். இன்னும் 6 மாதங்களில் இந்த பணிகள் முடிந்துவிடும்.
அங்கு பார்கிங் வசதியை ஏற்படுத்த அருகே உள்ள விவசாயியிடம் பேசியிருக்கிறோம். அங்கு 5 ஏக்கர் பரப்பளவில் பார்கிங் வசதி ஏற்படுத்தவுள்ளோம். அங்குத் தேவையான மற்ற வசதிகளை ஏற்படுத்தச் சுற்றுலாத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அமைச்சர் நிதி ஒதுக்கும்பட்சத்தில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம்" என்றார்.
செங்கோட்டையன் ரியாக்ஷன்
அப்போது செய்தியாளர் ஒருவர் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தீர்களே என்று கேள்வி எழுப்பினார். இதற்கு முன்பு வரை எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளித்து வந்த செங்கோட்டையன் இந்த கேள்வியைக் கேட்டதும் சட்டென கையெடுத்துக் கும்பிட்டவாறு எழுந்துவிட்டார். இந்த கேள்விக்குப் பதிலளிக்காத செங்கோட்டையன் "நீங்க என்ன அடுத்த விஷயத்திற்கு போய்டீங்க" என்று சொல்லியவாறே பிரஸ் மீட்ட முடித்துக் கொண்டார்.
தொடர்ந்து அரசியல் ரீதியாகப் பல கேள்விகளைக் கேட்கப்பட்ட போதிலும் செங்கோட்டையன், அவை எதற்கும் பதிலளிக்கவில்லை. கை எடுத்துக் கும்பிட்டவாறே கிளம்பிவிட்டார். அதிமுகவில் செங்கோட்டையனின் செயல்பாடுகள் பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ள நிலையில், அவர் தொடர்ந்து மவுனம் சாதித்து வருவது குழப்பங்களை மேலும் அதிகரிப்பதாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications