அன்பில் காட்டிய பாதை.. உதயநிதி கொடுத்த வாய்ப்பு.. யார் இந்த ஈரோடு தொகுதி எம்பி பிரகாஷ்?
ஈரோடு: ஈரோடு லோக்சபா அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை 2 லட்சத்து 36 ஆயிரத்து 566 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்பியாகி உள்ளார் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ். திமுக இளைஞர் அணி துணைச்செயலாளரான பிரகாஷ் யார்?அவரது வரலாறு என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஈரோடு லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞர் அணி துணைச்செயலாளர் கே.இ.பிரகாஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் வேட்பாளராக போட்டியிட்டார். பாஜக கூட்டணியில் த.மா.கா. வேட்பாளராக விஜயகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் கார்மேகன் உள்பட 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தேர்தல் நடந்தது. ஈரோடு லோக்சபா தொகுதியில் 70.59 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.

ஈரோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. மொத்தம் 22 சுற்றுகளிலும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் முன்னிலையில் இருந்தார். இறுதியில் பிரகாஷ் 5 லட்சத்து 62 ஆயிரத்து 339 ஓட்டு பெற்றார். இதன் மூலம் கே.இ.பிரகாஷ் 2 லட்சத்து 36 ஆயிரத்து 566 ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 3 லட்சத்து 25 ஆயிரத்து 773 ஓட்டுகள் மட்டும் பெற்று தோல்வியை தழுவினார்.
யார் இந்த பிரகாஷ்: 2024 லோக்சபா தேர்தலில் தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே இளைஞரணிக்காகக் கொடுக்கப்பட்டிருந்தது. சேலத்தில் நடைபெற்ற, இளைஞரணி மாநாட்டில் உதயநிதி வைத்த கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் திமுக இளைஞரணிக்கு ஒரு தொகுதி மட்டும் தந்தார். அந்த ஒரு தொகுதியிலும் பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில், இளைஞரணித் துணைச் செயலாளர் கே.இ.பிரகாஷ்-க்கு மட்டுமே ஸ்டாலின் வாய்ப்பளித்தார். ஈரோடு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்படாத நிலையில், அந்த தொகுதியில் பிரகாஷ் போட்டியிட போவது உறுதியானது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்துள்ள காணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் இளங்கலை பொருளாதாரம் படித்துள்ள இவர் விவசாய குடும்ப பின்னணி கொண்டவர். இவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி 1977-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கிளைச் செயலாளராக உள்ளார். இதனால் சிறுவயதிலேயே பிரகாஷ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
திமுக பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் 2012 முதல் ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்தார். இவர் நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித் துறை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இதன் காரணமாக பல்வேறு அமைச்சர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர் எ.வ.வேலுவுடன் நல்ல தொடர்பில் இருந்தார். மறுபக்கம் உதயநிதி ஸ்டாலின் உடன் அன்பில் மூலம் நெருக்கமானார். அந்த அடிப்படையில் தான் பிரகாஷ்க்கு சீட் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து ஈரோட்டில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 566 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி எம்பியாகி உள்ளார் பிரகாஷ்.












Click it and Unblock the Notifications