ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி! லயோலா முன்னாள் மாணவர்கள் பரபர சர்வே
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கள ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அங்கு யார் வெல்வார் என்பது குறித்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கள ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு தேர்தல் களத்தை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
ஆளும்கட்சி என்பதால் தேர்தலில் எப்படியாவது வென்றாக வேண்டும் என்று திமுகவும்.. தேர்தலில் வென்று ஆளும் தரப்பிற்கு அதிர்ச்சி தர வேண்டும் என்று அதிமுகவும் இறங்குகிறது. இது தவிர நாம் தமிழர், தேமுதிக கட்சிகளும் களமிறங்குகின்றன..

ஈரோடு கிழக்கு
இந்த இடைத்தேர்தலில் வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்னரே திமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவேரா தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்குகிறார். இடைத்தேர்தலுக்காகக் காங்கிரஸ் மற்றும் திமுக தனித்தனியாகக் குழுக்களை அமைத்துள்ளன. மேலும், மூத்த அமைச்சர்கள் தொடங்கி பலரும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதிமுக
இந்த இடைத்தேர்தலில் அதிமுகவில் முதலில் குழப்பமே நிலவியது. முதலில் அதிமுகவில் எடப்பாடி தரப்பு தென்னரசுவையும் ஓபிஎஸ் தரப்பு செந்தில் முருகனையும் வேட்பாளர்களாக அறிவித்தனர். இருவரும் இரட்டை இலைக்கு உரிமை கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வேட்பாளரைப் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். தென்னசரசு வேட்புமனு தாக்கல் செய்து, அவருக்கு இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டது

வேட்பாளர்கள்
அமமுகவும் இதில் போட்டியிடவில்லை. இதனால் இரட்டை இலை வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்கு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலிலும் நாம் தமிழர் வழக்கம் போல தனித்தே களமிறங்குகிறது. நாம் தமிழர் சார்பில் மேனகா போட்டியிடுகிறார். அதேபோல தேமுதிக, உள்ளிட்ட பல கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த முறை மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.

யாருக்கு வெற்றி
வரும் பிப்.27ஆம் தேதி தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் வெல்வார் என்பது குறித்து கள ஆய்வை நடத்தியுள்ள லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளன. இதில் திமுக கூட்டணியில் இருந்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 42-49% வாக்குகளைப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல அதிமுக வேட்பாளர் தென்னரசு 31-36% வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நாம் தமிழர்
இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் சார்பில் மேனகா களமிறங்கும் நிலையில், அவர் 6-10% வாக்குகளைப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தேமுதிக, நோட்டா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இணைந்து 5% வாக்குகளைப் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இடைத்தேர்தலில் 76-85 பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்க விரும்புவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

யாருடை ஆட்சி சிறப்பானது
மேலும் பிரசாரம் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் ஆகியோர் டாப் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.. மேலும், யாருடைய ஆட்சி சிறப்பாக இருந்தது என்ற கேள்விக்கு 53% பேர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி சிறப்பாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். மேலும், 42% பேர் ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருந்ததாகக் கூறியுள்ளதாக லயோலா முன்னாள் மாணவர்கள் நடத்திய கள ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications